எழுத்து இயக்கம் : சாய் ராஜ்குமார் ,ஒளிப்பதிவு :எம்.எஸ்.பிரபு , இசை :வினோத் .
சேரன் ,ஸ்ருஷ்டி டாங்கே ,சரயூ ,நந்தனா வர்மா ,இர்பான்.
************
‘கிளென் லெவின் சிண்ட்ரம் ‘என்கிற புதிய வியாதியை இயக்குநர் அறிமுகம் செய்திருக்கிறார். ஒருவன் தூங்கி விட்டால் அவன் எப்போது விழிப்பான் என்பது அவனுக்கு தெரியாது. வாரக்கணக்கில் கூட உறங்குவான் என்கிறார் சாய் ராஜ்குமார்.
சேரன், சி.பி சி.ஐ .டி அதிகாரி.அவருக்கு இந்த உறக்க வியாதி இருக்கிறது. கதையில் கணவனை டைவர்ஸ் பண்ணுவதற்கு மட்டுமே அந்த நோய் பயன்படுகிறதே தவிர மற்றபடி கதையைத் தாங்கிப் பிடிக்கிற அளவுக்கு அந்த சிண்ட்ரம் இல்லை. படுமோசமான குற்றங்களை செய்கிற குபேர வீட்டுப் பிள்ளைகளை நேர்மையான அதிகாரி சேரன் தண்டிக்கிறார்.அதற்கு பழி தீர்த்துக்கொள்வதற்காக அவரது மகளை வில்லன் காவு வாங்க துடிக்கிறான். பழக்கமான கதைதான்.இதுதான் கதையின் சத்து.இதற்கேற்ப திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள் . டைவர்ஸ் தொடர்பான காட்சிகளில் அது தெளிவாக இருக்கிறது.
இயக்குநர் சேரனுக்கு வித்தியாசமான கேரக்டர். சதா குடித்துக் கொண்டே இருக்கிறார். ஆபிசில் பாட்டில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு போதைக்காரார்.! குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசலின் தாக்கம் . இது போதாது என்று தூங்கும் வியாதி வேறு..கடுமையுடன் போராட வேண்டிய கேரக்டர்.சேரனுக்கு இந்த கதை தேர்வு எழுதுவதை போல.! பிட் அடிக்காமல் எழுதி இருக்கிறார்.முழுமையான மார்க் கிடைக்குமா?
மகள் நந்தனா வர்மாவை நால்வர் குழு எப்படியெல்லாம் சிதைத்து .சித்திரவதை பண்ணப்போகிறதோ என்கிற அவரது நினைப்பு நினைவில் நிற்கிறது.அவர் தேர்ந்த இயக்குநர் என்பதால் துயரங்களை வெளிப்படுத்த முடிகிறது.
வில்லன் இர்பான் முகத்தில் வெறி உறைந்து போய் இருக்கிறது. பணக்காரத் திமிர் சூப்பர்.
மகளாக நந்தனா வர்மா .வில்லன்களின் போக்கு நமக்கே புரிகிற போது அவருக்குத் தெரியாமல் போனதுதான் ஆச்சரியம்.வில்லன் தெளிவாக சொல்லியும் மூணாவது முறையும் போதை மாத்திரையை சாப்பிடுவது முரண்.
அது என்னமோ தெரியவில்லை சிருஷ்டி டாங்கேதான் அந்த கேரக்டருக்கு தேவைதானா?
பலவந்த முயற்சியில் ஒளிப்பதிவாளர் எம்.எஸ் பிரபுவின் கேமராவும் சேர்ந்து விளையாடியிருக்கிறது.
சினிமா முரசத்தின் மார்க் : 2 / 5