இசை : இளையராஜா ,கதை வசனம் ,இயக்கம் :மிஸ்கின் ,ஒளிப்பதிவு :தன்வீர்மிர் ,கலை : க்ராபோர்ட் .
உதயநிதி ஸ்டாலின் அதிதி ராவ் ,நித்யா மேனன் ,ராஜ்குமார் ( அங்குலிமாலி .)சிங்கம் புலி ,இயக்குநர் ராம், ரேணுகா ,
**************
தேர்ந்த கதை அமைப்பு . மிஸ்கின் படம் என்றாலே சிலருக்கு இளக்காரமாக இருக்கும்.அவரை ஒரு மெண்டல் அல்லது சைக்கோ என சொல்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த படம் பார்க்கத் தகுந்த படமாகத் தெரியாது. அதை ஆராய்வது நமது வேலை இல்லை.
படத்தில் ஒரு புத்தர் சிலையை சிம்பாலிக்காக காட்டி இருப்பார் மிஸ்கின். வில்லனின் பெயர் அங்குலிமாலி .புத்தர் காலத்தில் வாழ்ந்த பீகார் கொள்ளையன். இவனது குரு தனக்கு குரு தட்சணையாக ஆயிரம் விரல்களை கேட்டதால் வழிப்பறி கொள்ளையடிக்கும் போது விரலையும் வெட்டுவான் என்பது அங்குலிமாலா கதை .சைக்கோ கதையில் மெயின் வில்லனாக ராஜ்குமார் பெண்களின் தலையை வெட்டி அதை காட்சி பொருளாக வைத்துக் கொள்கிற சைக்கோ. பெண்களின் தலையை வெட்டி வைத்துக்கொள்கிற இந்த சைக்கோவாக வாழ்ந்திருக்கிறார்.
ஒரு மனிதனின் தனிமை, தீய பழக்கத்தினால் தண்டிக்கப்பட்ட ஆறாத மனம் ,சிலரை எப்படி கொடியோனாக மாற்றுகிறது என்பதை மிஸ்கின் அவருக்கே உரித்தான பாணியில் சொல்லியிருக்கிறார். பெண்களை கற்பழித்து.கதற கதற சீரழிக்கும் வழக்கமான சீரியல் கில்லராக அங்குலி மாலி இல்லை. கடத்திவருகிறான்.கை , கால்களை கட்டிப் போட்டு வாகாக தலையை சாய்த்து தொண்டையில் ஒரே வெட்டு ..தலை துண்டாக உருண்டு ஓடுகிறது. கிட்டத்தட்ட 13 தலைகள் .தன்வீர் கேமராவின் நகர்வு ,பதிவு செய்திருக்கிற கோணம் ,கோரத்தின் குணத்தை பிரதி பலிக்கின்ற ராஜாவின் பின்னணி இசை சூப்பர்.திரைக்கு பின்னால் இருந்தபடி மிஷ்கினின் கற்பனையை உயிர்ப்பிக்கிறார்கள் .
“மாஸ்டர்பேஷன் தப்பில்லையே ” என்பதை ஒரு பெண்ணை சொல்ல வைத்திருப்பதன் வழியாக தற்கால இளைய தலைமுறையின் போக்கினை காட்டியிருக்கிறார்கள்.
உதயநிதிக்கு கண்பார்வையற்ற வேடம்.கறுப்புக் கண்ணாடி. கையில் வாக்கிங் ஸ்டிக் .கஷ்டமே இல்லை.உணர்வுகளை வெளிப்படுத்த கண்களுக்கு அவசியமில்லை. அதிக குளோஸ் அப் தேவை இல்லை. சரியாக நடித்திருக்கிறார். நல்ல தேர்வு.
அங்குலிமாலியாக வருகிற ராஜ்குமாரை முன்னதாகவே பாராட்டியாகி விட்டது.
இரண்டு நாயகிகளில் அதிதி ராவை கட்டியே போட்டு நேரத்தை கடந்திருக்கிறார்கள். பரிதாப்படும் அளவுக்கு தோற்றமும் நடிப்பும் இருக்கிறது. இன்னொரு நாயகி நித்யா மேனனை வீல் சேரில் அமர்த்தி அமர்க்களமாக பேச,நடிக்க வைத்திருக்கிறார்கள். துணிச்சலான கேரக்டருக்கு சரியான ஆள். அவருக்கு வாழ்க்கையில் வெறுப்பு. இருட்டறையில் தனிமை .காவல்துறையில் பணியாற்றிய வீரமிக்க பெண்.
இயக்குநர் ராம், சிங்கம்புலி இருவரும் பாராட்டுக்குரியவர்கள். குறிப்பாக சிங்கம்புலியின் சினிமா வாழ்வில் இந்தப்படம் அவருக்கு நட்சத்திர முத்திரை குத்தப்பட் ட படம்.
இசைஞானியின் இசை ..எங்கு அமைதி காக்கவேண்டுமோ அங்கு நிசப்தம்,ஆர்ப்பரிக்கும் இடங்களில் அருவியின் ஓசை. நெஞ்சு தட தடக்கும் இடங்களில் பயத்தின் பிரதிபலிப்பு.! தொடக்கத்தில் வருகிற பாடல் ராஜா ராஜாதான் என்பதை வலியுறுத்திவிட்டது.
கலை ,ஒளிப்பதிவு இரண்டுமே விருதுக்குரியவை.
சினிமா முரசத்தின் மார்க் 3 / 5