1983 ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்தியா, அப்போதைய கேபடன் கபில்தேவின் பின்னணியில் நம் அணி உலககோப்பையை வென்றதை மீட்டுருவாக்கம் செய்துள்ள படம் தான் “83”.இதில்,பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கேப்டன் கபில்தேவ்வாக நடிக்கிறார். இவருடன் தாஹிர் ராஜ் பாஷின், ஜீவா, சாஹிப் சலீம், ஜதீன் சர்னா, சிராக் படேல், டிங்கர் சர்மா, நிஷாந்த் தாஹியா, ஹார்டி ஷந்து, ஷஹில் கத்தார், அம்மி விர்க், ஆதிநாத் கொதாரே, தாய்ர்யா கர்வா, R பத்ரி, பங்கஜ் திரிபாதி ஆகியோர் அணி வீரர்களாக நடித்துள்ளார்கள். தீபிகா படுகோன் கபில்தேவ் மனைவி ரோமி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.சென்னையில் நடந்த இப்படவிழாவில், உலகநாயகன் கமல்ஹாசன், கபில்தேவ்,ரன்வீர்சிங்,ஜீவா,இயக்குனர் கபீர்கான், கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது,
“இது மிக அரிய தருணம். இத்தனை திறமைகளுடன் நிற்பது பெருமை. 83 உலககோப்பைய வென்றது மட்டுமே நமக்கு தெரியும். இயக்குநர் கபீர்கான் அதன் பின்னால் இருக்கும் அறியப்படாத கதைகள் சொன்னார். பிரமிப்பாக இருந்தது. அவர்கள் எத்தனை கஷ்டங்களை தாண்டி வென்றார்கள் என்ற கதையை கேட்டபோது சூப்பர்ஹீரொக்கள் வரும் அவஞ்சர் கதையை விட இது தான் உண்மையான சூப்பர் ஹீரோக்களின் கதை என தோன்றியது. இந்த படத்தை நிஜமாக்கிய அனைவருக்கும் வாழ்த்துகள். கபில்தேவ் அவர்களுக்கான உண்மையான பாராட்டு இன்னும் கிடைக்கவில்லை அவர் அத்றகு கவலைப்படவும் மாட்டார். ஆனால் அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும். கிரிக்கெட்டர் ஶ்ரீகாந்தை என் படத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன் முடியாமல் போய்விட்டது. அவரை நண்பராக பல்லாண்டுகள் பழக்கம். இப்படத்தின் நடிகர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். கபீர்கான் மிக நன்றாக இயக்கியிருக்கிறார். நான் இப்படத்தை இயக்கியதாகவே நினைக்கிறேன். ஆனால் என்னை விட கிரிக்கெட் மீது காதல் கொண்டு கபீர்கான் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் என்னையும் இணைத்து கொண்டதற்கு அனைவருக்கும் நன்றி” என்றார்.
விழாவில்,நடிகர் ரன்வீர் சிங் பேசியது….
இந்த மிகப்பெரிய வரவேற்புக்கு நன்றி. சென்னைக்கு இது எனது முதல் பயணம். இங்கு கமல் சாருடன் இருப்பது பெருமை. இந்தப்படமே ஒரு மாயாஜாலம் தான். கபீர்கான் திரையில் எப்போதும் மாயாஜாலங்கள் நிகழ்த்தக்கூடியவர். அவர் இந்தப்படம் பற்றி கூறியபோது பிரமிப்பாக இருந்தது. என்னை சுற்றி நிறைய நல்ல விசயங்கள் நடக்கின்றன. இன்று கமல் சார், கபில்தேவ், ஶ்ரீகாந்த் என ஜாம்பவான்களுடன் இருக்கிறேன். 83 உலககோப்பையை வென்றது இந்திய சரித்திரத்தின் பெருமை மிகு தருணம். அந்த தருணத்தை நாங்கள் திரையில் கொண்டுவரவுள்ளோம். இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று உங்கள் முன் வெளியிடுவதில் மகிழ்ச்சி. கபில்தேவ் ஒரு முறை கூட போல்டானதில்லை அவரது சாதனைகள் அளப்பரியது. அவர் வாழ்வில் என்னை அனுமதித்ததற்கு அவர் கதாப்பாத்திரம் செய்ய அனுமதி தந்ததற்கு நன்றி. 83 அணி இன்றும் நட்பாக இருக்கிறார்கள். அந்த நட்பு குழு மனப்பான்மைதான் வெற்றியை பெற்று தந்தது. நானும் இப்படத்தில் பணிபுரிவதில் நிறைய நட்பை சம்பாதித்திருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
நடிகர் ஜீவா பேசியது….
கமல் சார் இந்த மேடையில் 18 வருடம் முன் அறிமுகப்படுத்தினார். இன்று இங்கு இருப்பது மகிழ்ச்சி. கபீர் சார் இந்தக் கதாப்பாத்திரம் செய்வதாக சொன்னபோது ஶ்ரீகாந்த் சார் கேரக்டரை நான் எப்படி செய்ய முடியும் என பயந்தேன். ஆனால் படக்குழு அனைவரும் மிகவும் ஆதரவாக இருந்தார்கள். என்னை 6 மாதம் பயிற்றுவித்தார்கள். ஷீட்டிங்கின் போது கபில்தேவ் சார் வந்திருந்தார். அவர் நிறைய சொல்லித்தந்தார். ரன்வீர் உடன் பணிபுரிந்தது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. அவர் ஓய்வே இல்லாமல் இக்கதாப்பாத்திரத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். இப்படம் மூலம் மிகப்பெரிய நட்பு வட்டம் கிடைத்திருக்கிறது. இந்தியா முழுதும் எங்கு போனாலும் இன்று எனக்கு நட்பு இருக்கிறது. ஶ்ரீகாந்த் நடிப்பதற்கு அறிவுரை கேட்டபோது “கண்ண மூடிட்டு சுத்து பட்டா பாக்கியம் படலனா லேகியம்” என்றார். அவர் கலகலப்பானவர். ஶ்ரீகாந்தாக நடித்தது என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத மகிழ்வான தருணம் என்றார்.
இயக்குநர் கபீர்கான் பேசியது….
கமல் சாருடன் இன்று இருப்பது பெருமை. நான் சிறுவனாக இருந்த போது 83 உலககோப்பையை வென்றதை பார்த்திருக்கிறேன். உலககோப்பையை வென்றபோது அந்த அணியில் இருந்தவர்கள் இளம் வீரர்கள். அவர்களை யாரும் நம்பவில்லை ஆனால் அவர்கள் கோப்பையை வென்றெடுத்தார்கள். இந்தியாவே மொத்தமாக கொண்டாடிய தருணம் அது. கமல் சார் இப்படத்தை தமிழில் முன்னெடுப்பது எங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷம்.
கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த் பேசியது….
உண்மை என்னவெனில் 83 உலககோப்பையை வெல்வோம் என நம்பிய ஒரே மனிதன் கபில்தேவ் தான். அவன் தன் முதுகில் மொத்தத்தையும் சுமந்தான். கபில்தேவ்வாக யாருடா நடிப்பார்கள் எனப் பார்த்தேன். ரன்வீர் கடும் உழைப்பை தந்திருக்கிறார். ஒரு நாளில் 16 மணி நேரம் பயிற்சி எடுத்து செய்துள்ளார். கபீர்கான் மிகச்சிறந்த இயக்குநர் மிக அருமையாக எடுத்திருத்திருக்கிறார். கபில்தேவ் எப்படி உற்சாகமாக இருப்பரோ அதே போல் ரன்வீர் இருக்கிறார். ஜீவாவும் நன்றாக செய்துள்ளார். நான் வளர்ந்தது வாழ்வது இங்கே சென்னை தான் கமல் சார் பற்றி என்ன சொல்ல முடியும். அவர் சாதனைகள் அளப்பரியது. இங்கு வந்து ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.
கபில்தேவ் பேசியது….
என்னுடன் இருந்த 83 அணிக்கு முதலில் நன்றி. இப்போது அதனை மீட்டுருவாக்கம் செய்யும் அனைவருக்கும் நன்றி. தமிழகம் வந்தபோது நான் தமிழை கற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன் எவ்வளவு அழகான மொழி. ஐ லவ் சென்னை. கமல்ஹாசன் சார் இன்று எங்களுடன் இணைதிருப்பதற்கு நன்றி. ஶ்ரீகாந்த் அப்போது விளையாடியபோது எப்போதும் உற்சாகமாக பரபரப்பாக இருப்பார். பிரதமர் இந்திராகாந்தி வந்தபோது எல்லோரையும் நான் அறிமுகப்படுத்தினேன் அப்போது ஶ்ரீகாந்தை அறிமுகப்படுத்திய போது விரைப்பாக நின்றார். ஆனால் முப்பதாவது நொடியில் மீண்டும் கலகலப்பை ஆரம்பித்து விட்டார். பிரதமர் முன்னால் இப்படி செய்யலாமா எனக்கேட்டேன் அவர் தான் தொடங்கினார் என பிரதமரை சொன்னார். அத்தனை கலகலப்பானவர் அவர். இப்படம் பல நினைவுகளை தரக்கூடியது இதனை சாத்தியபடுத்திய அனைவருக்கும் நன்றி.