சிம்புவின் பீப் பாடலுக்கு எதிர்ப்பும், ஆதரவும் சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டே தான் இருக்கின்றது. இந்நிலையில் ராதிகா, சில தினங்களுக்கு முன் தன் டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை கூறியிருந்தார். அதில், நடிகர் சிம்பு விவகாரத்தில் நடிகர் சங்கம் ஏன் தலையிடவில்லை, என்று கேள்வி எழுப்பியிருந்தார். இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இன்று நடந்த நடிகர் சங்க செயற்குழுக் கூட்டத்தில் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி நடிகர் சங்கத்தை பற்றி அவதூறாக பேசியதற்காக ராதிகாவிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவுள்ளதாகவும் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார். மேலும், பீப் பாடலுக்கு நாங்கள் சிம்புவை மன்னிப்பு கேட்குமாறு கூறினோம், அவர் ‘நான் நீதிமன்றம் வாயிலாக பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி விட்டார் அதன் பிறகு அவருக்கு நடிகர் சங்கம் எந்த வகையில் உதவி செய்ய முடியும் என்று எங்களுக்கு தெரிய வில்லை! இவ்விவகாரம் தொடர்பாக சிம்புவை நடிகர் சங்கத்தை விட்டு நீக்குவது என்ற பிரச்சனைக்கே இடம் இல்லை! எனவும் கூறினார்