சீனாவில் மிக வேகமாக பரவி வரும் கொடிய கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் காரணமாக மேலும் 1,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதுவரை சீனாவில் 9,692 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு ஆய்வகங்களில், இந்த வைரசுக்கு தடுப்பு மருந்தினை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
சீனாவில் மட்டும் மொத்தம் 31 மாகாணங்களில் இந்த பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக அங்குள்ள வூபய் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. சீனாவில் இருந்து, மற்ற நாடுகளுக்கும் இந்த வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது. இதன் காரணமாக சீனாவுக்கான விமான சேவையை நிறுத்துவதாக, பல்வேறு நாட்டு விமான நிறுவனங்களும் அறிவித்துள்ளன.
அங்கு கல்வி நிறுவனங்களில் படிக்கும் மற்ற நாடுகளை சேர்ந்த மாணவர்களை அழைத்துச் செல்லும் முயற்சியிலும், பல நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.