நமது பாரம்பரிய உணவான உளுந்தங்களி நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அதிகம் அளிக்கிறது. உளுந்தில் புரதம், கொழுப்பு, வைட்டமின் B மற்றும் கார்போஹைடிரேட் உள்ளிட்ட சத்துகள் அதிகம் . மேலும் பெண்களுக்கு தேவையான இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவற்றை தந்து இடுப்பு எலும்புகளை வலுப்படுத்துகிறது. உளுந்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. நரம்பு மண்டலம் வலிமை பெற உதவுகிறது.
அதெல்லாம் தாத்தா பாட்டியோட போயாச்சு, எங்களுக்கு இதெல்லாம் செய்யத் தெரியாதுன்னு நீங்க சொல்றது புரியுது!
சரி, (4 பேர் சாப்பிடுற அளவு ) வாங்க உளுந்தங்களி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்
தேவையான பொருட்கள்;
அரைத்த உளுந்த மாவு – 4 கை அளவு
கருப்பட்டி அல்லது வெல்லம் – ருசிக்கு ஏற்ப (சுமார் அளவு 200 கிராம்)
தேங்காய் துருவியது – 3 ஸ்பூன் அளவு
நல்ல எண்ணெய் – 4 ஸ்பூன்
அரிசி மாவு – 4 ஸ்பூன்
வீட்டில் இட்டிலிக்கோ, தோசைக்கோ மாவு அரைக்கும் போது வீட்டில் உள்ள நபர்களுக்கு ஏற்ப உளுந்தை கூடுதலாக சேர்த்து அரைத்து எடுத்து வச்சுக்கோங்க.
அந்த உளுந்த மாவை புளிக்க வச்சுராதீங்க.. பிரிட்ஜ்ஜில் வச்சுட்டு நேரம் கிடைக்கும் போது எடுத்து ( ஒரு நாளைக்குள்) களி தயாரிக்கலாம்.
முதலில் கருப்பட்டி அல்லது வெல்லத்தை தேவையான தண்ணீர் சேர்த்து கரைச்சுக்கோங்க ஒரு கடாயில் அரைச்ச உளுந்த மாவைப் போட்டு சிறிது கூடுதலா (1/2 டம்ளர்) தண்ணீர் சேர்த்து கையால் கலந்துகிட்டு அதோட அரிசி மாவையும் கலந்துக்கோங்க .
கரைசலை ஒரு முறை நன்கு கலக்கி விடுங்க.. உப்புமா செய்ய, கொதிக்கிரா தண்ணில ரவையை கொஞ்சம்கொஞ்சமா சேர்த்து கரண்டியால் கிண்டுவோம்ல, அதுமாதிரி நிதானமா கிண்டுங்க.
5 நிமிஷத்தில் நல்லா சேர்ந்து கேசரி மாதிரி பதம் வரும். அப்போ ‘தீ’யை மிதமா வச்சு,நல்லெண்ணெய் சேர்த்துக்கோங்க . களி வெந்து டப் டப் என்ற சத்தத்துடன் முட்டை போல் வரும்.அந்த நேரத்தில் தயாரா வச்சிருக்கிற தேங்காய் துருவலையும் சேர்த்து ஒரு தடவை கிண்டி, கருப்பட்டி அல்லது வெல்லக் கரைசலை வடிகட்டி களியில் சேர்த்து 5 நிமிடம் வேக வச்சுருங்க.
உளுந்தோட பச்சை வாசனை போய் கருப்பட்டி அல்லது வெல்லக் கரைசல் கட்டியானதும் இறக்கிருங்க .அவ்வளவு தாங்க…! சுவையானசூப்பரான உளுந்தங்களி ரெடி!!