கதை, இயக்கம் : தனா (தனசேகரன் ) வசனம் :மணிரத்னம் ,தனா . ஒளிப்பதிவு :பிரீதா ஜெயராமன் , இசை ; சித் ஸ்ரீராம் ,
சரத்குமார் ,ராதிகா சரத்குமார் , விக்ரம் பிரபு , ஐஸ்வர்யா ராஜேஷ் ,மடோனா செபாஸ்டியன் , சாந்தனு பாக்யராஜ் , நந்தா ,பாலாஜி சக்திவேல் , மதுசூதன் ராவ் .
**************
தியேட்டரை விட்டு வெளியேறுகிறபோது நமது நெருங்கிய உறவுகளை விட்டு பிரிகிற உணர்வு. இப்படியொரு குடும்பத்தினரை மீண்டும் பார்க்க முடியுமா என்கிற தவிப்பு.. உறவுகளுக்குள் நிகழ்கிற தேர்தல் பகை இரண்டு குடும்பத்தை எங்கே கொண்டு நிறுத்தி இருக்கிறது என்பதை மான, ரோசத்துடன் சொல்லியிருக்கிறார்கள். தேனியில் நடந்த உண்மைச்சம்பவத்தை தழுவிய கதை என்கிறார்கள். தனது உதவியாளர் தனசேகரனின் கதையை தயாரித்து அவருடன் இணைந்து வசனமும் எழுதியிருக்கிறார் மணிரத்னம்.
முக்கியமான நடிகர்கள் நடித்திருந்தாலும் யாரையும் முன்னிலைப் படுத்தாமல் அந்தந்த கேரக்டர்களை மட்டுமே உயர்த்தி பிடிக்கிற திரைக்கதை. இதுதான் நம்மை கொண்டாட வைக்கிறது.இயக்குநர் தனசேகரன் முதல் படமே ஐ எஸ் ஐ முத்திரை குத்திக்கொள்கிறது.
முதுகில் வெட்டருவாள் கொத்தி நிற்க வயலில் விழுகிறார் பாலாஜி சக்தி வேல். பெரியப்பா விழுந்து கிடப்பதை பார்த்த பாலாஜி சக்திவேலின் தம்பியான சரத் குமாரின் மகன் துடித்துப் போய் வீட்டில் தகவல் சொல்கிறான். பழி வாங்கும் வெறியுடன் சரத்குமார் இரண்டு பேரை கொலை செய்துவிடுகிறார். 14 ஆண்டுகால சிறைத்தண்டனை. பரஸ்பர வெறியுடன் அங்கு வாழ்வதை விட சென்னைக்கு சென்றுவிடலாம் என்று முடிவு செய்கிற சரத்தின் மனைவி ராதிகா தன்னுடைய பிள்ளைகளுடன் அந்த வீட்டிலிருந்து வெளியேறுகிறார். அவரது பிள்ளைகள்தான் விக்ரம் பிரபு ,ஐஸ்வர்யா ராஜேஷ். சிறையில் இருந்து விடுதலை ஆகும் சரத் சென்னைக்கு சென்று மனைவி மக்களுடன் வாழ ஆசைப்படுகிறார். அதனால் ஏற்படுகிற விளைவுகள் என்ன ,பழி வாங்கும் வெறியுடன் துரத்துகிறவர்களின் முடிவு என்னவாகிறது என்பதுதான் மீதிக்கதை.
சரத்குமார் -ராதிகா சரத்குமார் இரண்டு வல்லவர்களும் நெடுங்கால இடைவெளி கடந்து இணைந்து நடித்திருக்கிறார்கள். இருவரது அனுபவம், நடிப்பில் ஒருவரையொருவர் முந்தப் பார்க்கிறது. பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி இருவருக்குமே அக்கறை இருந்தாலும் அணுகுமுறை மாறுபடுகிறபோது சுவாரசியமும் அதிகமாகிறது. இருவருமே அங்கங்கே நெகிழ வைக்கிறார்கள். அடேங்கப்பா ,இந்த சரத்குமாரை பார்த்து எவ்வளவு ஆண்டுகள் ஆகிறது .
உயிரோட்டமான இன்னொரு கேரக்டர் பெரியப்பா பாலாஜி சக்திவேல். இவரை கொண்டாடாமல் ஒரு விமர்சனமா? பாலையா.டிகே பகவதி ஸ்டைலில் குணசித்திர நடிகர்.
கோயம்பேடு வாழைக்காய் வியாபாரியாக விக்ரம் பிரபு. டூயட் பாடி சரசமிட்டு சண்டை போட்டு பழக்கப்பட்டுவிட்ட கதாநாயகனை இந்தப்படத்தில் பார்க்க முடியவில்லை. யதார்த்தமான ,இயல்பான வியாபாரியாக அன்னை இல்லத்துப் பிள்ளையை கண்முன்னே நிறுத்தியிருக்கிறது. விக்ரம் பிரபுவை மணிரத்னத்தின் பட்டறை பட்டை தீட்டிய வைரமாக மாற்றி இருக்கிறது.
எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதற்குள் சுலபமாக நுழைந்து விடுவார் ஐஸ்வர்யா ராஜேஷ். இயக்குநரின் நடிகை.
பழிவாங்கத் துடிக்கிற நந்தாவுக்கு இரட்டை வேடம் என்பது வீண் .
ஐஸ்வர்யா ராஜேசுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது சாந்தனு பாக்யராஜின் கேரக்டர் ..
இயக்குநர் தனாவுக்கு வாழ்த்துகள் .
குடும்பத்துடன் பார்க்கலாம்.