தமிழ்ச்சினிமாவில் அதிக அளவில் கோடிகளை அள்ளுகிறவர்கள் என்கிற சங்கதியில் சூப்பர் ஸ்டார் ரஜினி ,தளபதி விஜய் ,அல்டிமேட் ஸ்டார் தல அஜித்குமார் ஆகியோரின் பெயர்கள்தான் அடங்கி இருக்கிறது.
யார் யார் எவ்வளவு வாங்குகிறார்கள் என்பது அவரவர் மனசாட்சிக்கு மட்டுமே தெரிந்த விஷயம் .
வருமானவரி அதிகாரிகளால் கூட திட்டமிட்டு சொல்ல முடியாத சிதம்பர ரகசியம்.!
ரஜினிகாந்த் 100 கோடி சம்பளம்.ஜிஎஸ்டி வரியையும் தயாரிப்பாளர்கள் கட்டிவிடவேண்டும் என்பது கட்டாயம் என்பதாக திரை உலக திண்ணைகளில் பேசிக்கொள்வார்கள். அந்த முன்னணி நடிகர் மூவருமே ஜிஎஸ்டி வரியையும் கட்டச்சொல்கிறார்கள் என்பது தயாரிப்பாளர்களின் மறைமுக குற்றச்சாட்டு. பெரிய நிறுவனங்கள் கூட சம்பள விவரங்களை வெளியிடுவதில்லை.
தற்போது தர்பாரில் தங்களுக்கு பெருத்த நட்டம் என்று சொல்லிக்கொள்கிற விநியோகஸ்தர்கள் கூட சரியான புள்ளிவிவரங்களை சொல்லாமல் தோராயமாகத்தான் சொல்லுகிறார்கள்.
எவ்வளவு கொடுத்தோம் யாரிடம் கொடுத்தோம் என்கிற உண்மைகளை அவர்களும் மறைத்துத்தான் சொல்கிறார்கள். இருந்தாலும் அவர்களுக்கான அமைப்புகள் வழியாக போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் ரஜினிகாந்த் தனது ஊதியத்தை குறைத்துக் கொண்டிருக்கிறார் என்பதாக கால் இல்லாமல் ஒரு தகவல் நடந்து போகிறது.
சன் குழுமத்தின் அதிபர் கலாநிதி மாறன் ஊதியத்தில் பாதியை குறைக்கப்போகிறார் என்கிறார்கள்.
கிளப்பல் செய்தியா ,உண்மை செய்தியா ? யார் சொல்லுவார்கள்?