எழுத்து ,இயக்கம் :அஸ்வத் மாரிமுத்து. ஒளிப்பதிவு :விது அய்யன்னா ,இசை : லியோன் ஜேம்ஸ் ,தயாரிப்பு ; ஜி.டில்லிபாபு .இணைத்த தயாரிப்பு ;அசோக் செல்வன் ,அபிநயா செல்வம் .
அசோக் செல்வன் ,ரித்திகா சிங் வாணி போஜன் , சிறப்புத் தோற்றம் :விஜய சேதுபதி,சாரா .
*********
வாழ்க்கையில் முரண்படுவதும் பின்னர் உடன் படுவதும் காதல் மணத்தம்பதியர் வாழ்வில் இயல்பானது. மகிழ்ச்சியாகவே சென்று கொண்டிருந்தால் சலிப்பு ஏற்படக்கூடும் . ‘உடன்படுக்கை’யில் சற்று முரண்பட்டு ,ஊடல் செய்து கூடுவது தனிச்சுகம். ஊடலும் வாழ்க்கைக்கு அவசியம். இந்த கதையில் அதை கற்பனைக்கடவுள் வழியாக இளமை ததும்ப சொல்லியிருக்கிறார்.
நட்புடன் ரித்திகா சிங்குடன் பழகிய அசோக் செல்வனுக்கு முதலிரவில் ‘ரொமான்ஸ் ‘ வர மறுக்கிறது. இதை உணர்ந்து கொண்ட ரித்திகாவும் எந்திரத்தனமாக ‘கூடுவதை ‘விட இயல்பான காதலுடன் கூடினால்தான் அதில் மயக்கம் இருக்கும் என அந்த ரொமான்ஸ் வருகிறவரை காத்திருக்க சம்மதிக்கிறார். ஆனால் சிறு சிறு பிரச்னைகள் வந்தாலும் சகித்துக் கொள்கிற ரித்திகாவினால் கல்லூரிக்கால வாணி போஜன் வந்ததும் பெண்களுக்கே உரிய சந்தேகம். கணவனுடன் சண்டைகள் .கடைசியில் டைவர்ஸ்.
ஆனால் விவாகரத்து நடந்ததா,இல்லையா? அது கடவுளாக வந்து சேருகிற விஜய சேதுபதியினால் எப்படியெல்லாம் திசை மாற்றம் பெறுகிறது என்பதை துடிப்பும் துள்ளலுமாக சொல்லியிருக்கிறார்கள். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கதையை கொண்டு சென்றிருக்கிற பாணி முந்தைய சில படங்களை நினைவு படுத்தினாலும் அவை வேறு.இது வேறு என்பது காட்சிப் படுத்தலில் தெளிவாகிறது.
அசோக்செல்வனின் இயல்பான நடிப்பு.
உடல் பசி மட்டுமே வாழ்க்கை ஆகிவிடாது . அது ஹார்மோன்களால் வருவது என்றாலும் நட்பு என்பது அழுத்தமாக பதிந்து விட்டால் மூக்கு வரும் வரை நெருங்குகிற முத்தம் சிரிப்பை திணித்து விலகி கொள்ளும் என்பதை அருமையாக பிரதிபலித்திருக்கிறார். அந்தக்காலத்து மாதவனை நகலெடுத்த மாதிரி சில காட்சிகளில் தெரிகிறார். இயக்குநர் கவுதம் மேனன் முன்பாக ‘நடித்துக் காட்டுவது’ சூப்பர். சொந்த வாழ்க்கையின் பாதிப்பு !
எந்த காரணத்துக்காக கிக் பாக்ஸர் ரித்திகா சிங்கை தேர்வு செய்தார்கள் என்பது தெரியாது. ஆனால் அவர்தான் அனு கேரக்டருக்குப் பொருந்துவார் என்கிற கணக்கு பொய்யாகி விடவில்லை .அந்த நூடுல்ஸ் தலையும் அவருக்கு அழகுதான். மீரா மீது நம்ம பயலுக்கு நோக்கம் இருக்குமோ என்கிற சந்தேகம் வருவதும் பின்னர் விலகுவதும் ரித்திகாவினால் நிஜத்தோற்றம் பெறுகிறது.
சின்னத்திரை வாணி போஜனை அகலத்திரை ஏற்றுக் கொள்ளுமா என்கிற சந்தேகம் சிலருக்கு வரலாம். காதலில் ஏமாற்றம் அடைந்த பெண் மனசுக்குள்ளேயே வெந்து உருகினாலும் அதை வெளிக்காட்டாமல் தவிக்கிற முகம் அது. டூயட்டெல்லாம் பாடுமா,என்பது இனி வரப்போகிற படங்களில் தெரிய வரலாம்.
சாராவுக்கு படத்தின் நாயகர்களுக்கு நல்ல துணையாக வருகிற வாய்ப்புகள் அதிகம் வரலாம்.
காதலர்களுக்கு இந்தப்படம் கடற்கரை ரிசார்ட்டில் வாழ்கிற மாதிரி.!
தம்பதிகளாக வாழ்ந்தவர்களுக்கு , நடந்து வந்த வாழ்க்கையை திரும்பவும் பார்ப்பது மாதிரி!