எழுத்து இயக்கம் : ரானா ,ஒளிப்பதிவு : வாஞ்சிநாதன் ,இசை :ஹிப்ஹாப் ஆதி ,
ஹிப்ஹாப் தமிழா ஆதி , ஐஸ்வர்யா மேனன் ,கே.எஸ்.ரவிக்குமார் ,யோகிபாபு , முனீஸ் காந்த் ,ஷா ரா,
**************
கெக்கே பெக்கேன்னு ஒரு குறும் படம் ..அதன் விரிவாக்கம்தான் இந்த ‘நான் சிரித்தால் ‘படம் என்கிறார்கள் .சரி படம் பார்க்கிறவர்கள் சிரிக்கிறார்களா?
சோகமோ,கோபமோ வந்து விட்டால் ஹிப்ஹாப் ஆதிக்கு சிரிப்பு வந்து விடும். அதனால் அவர் அடைகிற இன்ப துன்பம் என்ன என்பதை அந்த விசித்திர நோய் வழியாக படம் பார்க்கிறவர்களை சிரிக்க வைக்கும் பெரு முயற்சிதான் இந்த படம்… முடிந்ததா அவர்களால்?
மொத்தம் 130 சொச்சம் நிமிஷங்களில் ரெண்டே ரெண்டு இடங்களில் மட்டும் அவர்களின் பப்பு வேகிறது.!
தல அஜித் படத்தில் வில்லன் கோஷ்டியினரால் அவர் தாக்கப்பட்டு சோகத்தில் ரசிகர்களை கலங்கடிக்கிற இடத்தில் மொத்த தியேட்டரும் கலங்கி நிற்கிறது ,ஆனால் அண்ணன் ஆதி மட்டும் அந்த நோயின் தாக்கத்தால் சிரிக்கிறார். இப்படி ஒரு விசித்திர நோய் இருக்கிறது என்பது மற்றவர்களுக்கு தெரியுமா என்ன ?
“டேய்..நீ விஜய் ரசிகனா..போடுங்கடா ” என தல ரசிகர்கள் வெளுக்கிறார்கள். இதைப்போல தளபதி விஜய் படத்திலும் சோக காட்சியில் “இவன் அஜித் ரசிகன்டா “என சொல்லி அடித்து துவைக்கிறார்கள். இந்த காட்சிகளில் மட்டும் நம்மை மறந்து சிரிக்கிறோம்..
அதன் பிறகு ஆதி சிரிக்கிற காட்சிகளை ‘ப்சு’ கொட்டியே கடந்து விடுகிறோம். வில்லன் கே.எஸ்.ரவிக்குமார் ஆட்கள் ஆதியை கட்டி வைத்து அடித்து நொறுக்கும்போது கூட அவருக்கு ஏளனம் செய்வது போல தெரிவது அந்த கேரக்டருக்கு சரி…நமக்கு இரக்கம் வரவேண்டாமா? வரலே முருகா !
ஐஸ்வர்யா மேனன்தான் நாயகி.எப்படியாவது நடுத்தர குடும்பத்து ஆதியை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என தவியாய் தவிக்கிறார். அதற்காக சில பொய்கள். ஹீரோ ஓரியண்டட் படங்களில் நாயகிகளுக்கு எந்த அளவு முக்கியம் இருக்கும் ?துணிக்கடை பொம்மைகளுக்கு தினமும் துணிகளை மாற்றுவதை போல காஸ்ட்யூம் சேஞ்ச் !
இரண்டு ரவுடிகள் கோஷ்டிகளில் ஒன்றுக்கு கே.எஸ்.ரவிகுமார் தலைவர். இன்னொரு கோஷ்டிக்கு ரவி மரியா தலைவர். டில்லிபாபு என்கிற ரவிகுமாரை போட்டுத்தள்ள சிலரை ரவிமரியா அனுப்பி வைக்க அவர்கள் டில்லிபாபு என்கிற யோகிபாபுவை கடத்துகிற கிளை கதையும் சவலைப்பிள்ளை மாதிரி நேரத்தை கடத்துகிறது.ஆள் மாறாட்டம்,கார் மாற்றம் இந்த படத்திலும் இருக்கிறது.
ஷா ராவிடம் நல்ல முன்னேற்றம்.!
யோகிபாபுவுக்கு பிற்பாதியில் வாய்ப்பு.என்றாலும் வழக்கமான கலகலப்பு தவிர்த்து சோகமும் வரும் என காட்டுவதற்கான முயற்சி செய்திருக்கிறார்.