நாம் தமிழர் இயக்கம் தமிழ்ச்சினிமா மீது கவலை கொண்டிருப்பது இயல்பானது ஆகும்.
அதன் தலைவர் சீமான் அரசியல் கட்சித் தலைவராக இருந்தாலும் அவர் நடிகர் ,இயக்குநர் என பன்முகம் கொண்டிருக்கிறார்.
அவர் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். அந்த அறிக்கையில் சீமான் கூறி இருப்பதாவது :
“ஏறத்தாழ ஆயிரம் திரையரங்குகள் கொண்ட தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் முந்நூறுக்கும் மேற்பட்டத் திரைப்படங்கள் வெளியானாலும் முன்னணி நடிகர்கள் நடித்தப் படங்களை மட்டுமே கருத்தில் கொண்டே திரையரங்குகள் செயல்படுகின்றன.
அந்த படங்களைத் தவிர்த்து, இதரப் புதியத் தயாரிப்பாளர்கள், சிறு தயாரிப்பாளர்களின் படங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. சிறியப் பொருளாதாரத்தில் எடுக்கப்படும் திரைப்படங்கள் வெளியாவதற்குத் திரையரங்குகள் கிடைப்பதில்லை. மேலும், பண்டிகைக்காலங்களில் சிறு திரைப்படங்களைத் திரையிட முடியாத சூழல்தான் நிலவுகிறது. அப்படங்களுக்குக் கூட்டம் அதிகம் வராத ஒரே ஒரு பகல் காட்சி மட்டுமே திரையிட வாய்ப்பு கிடைப்பதால் அந்த திரைப்படம் நன்றாக இருப்பதை அறிந்து மக்கள் திரையரங்கை நோக்கி வரும்போது அத்திரைப்படங்கள் திரையரங்குகளைவிட்டே நீக்கப்பட்டுவிடுகின்றன.
இதனாலேயே, சிறு, குறு தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படங்கள் ஆண்டுக்கு நூறு படங்கள் என்ற வீதத்தில் வெளிவராது முடங்கிக்கிடக்கின்றன. இவ்வாறு முடங்கித் திரையரங்குக்கு வராமலிருக்கும் படங்களின் எண்ணிக்கை மட்டும் 1500யைத் தாண்டும். இதனால், திரைத்துறைக்கு ஏற்பட்ட இழப்பு 2,500 கோடிக்கு மேலிருக்கும் என்று சொல்லப்படுகிறது.
திரையரங்குகளை முறைப்படுத்தி திரைப்படங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டியதே அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது.
ஆகவே, திரைத்துறையை மீட்டெடுத்து நல்வழிப்படுத்த முறைகேடாக திரைப்படங்களில் இணையதளங்களிலும், இன்ன பிற தளங்களிலும் வெளியாவது தடுக்கப்பட வேண்டும் எனவும், திரையரங்க வாகன நிறுத்தம், திண்பண்டங்களின் விலையைக் கட்டுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க திரைப்பட ஒழுங்குமுறை ஆணையமும், திரைப்படங்களுக்கு முறையாகத் திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்படுவதைக் கண்காணிக்க சிறப்புக் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட வேண்டும் எனவும், சிறு, குறு தயாரிப்பாளர்களின் திரைப்படங்களையும், சமூகக்கருத்துகளைக் கொண்ட தரமானப் படைப்புகளையும் அரசே ஏற்று வெளியிட வழிவகை செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.”என்று அந்த கட்சியின் தலைவரும் திரைப்பட இயக்குனருமான சீமான் அறிக்கையில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.