பிப்ரவரி மாதம் பல சினிமா போராட்டங்களை பார்த்து ,வதந்திகளை கேட்டு பழகி விட்டது.
சிலர் தர்பார் திரைப்படத்தினால் பெரிய நட்டம் ஏற்பட்டிருக்கிறது .அதற்கு இழப்பீடு தரவேண்டும் என்று தயாரிப்பாளர் லைகா ,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ,இயக்குநர் ஏஆர் முருகதாஸ் ஆகியோர் வீடுகள் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
அந்த விநியோகஸ்தர்கள் சென்னையிலேயே தங்கி தினமும் குமுறலை கொட்டி வந்தார்கள்.
இப்போது அமைதி.! ஆனாலும் சென்னை வேறு சில போராட்டங்களை பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஆனாலும் போராடிய விநியோகஸ்தர்கள் எல்லோரும் என்ன ஆனார்கள், அமைதியாகி விட்டார்களா? இழப்பீடு கிடைத்து விட்டதா?
எதுவும் தெரியவில்லை.!
ஏஆர் முருகதாஸ் கோர்ட்டுக்கு சென்ற பின்னர் போராடியவர்கள் அமைதியாகி விட்டார்கள் என பேசுகிறார்கள்.
வழக்கு விவகாரம் என்று போனால் கோர்ட்டில் வசூல் நிலவரம் ,விலை கொடுத்து படம் வாங்கிய உண்மை விவரம் ,நட்டம்தானா என்பதையெல்லாம் சொல்ல வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறது. இது மேலும் சிக்கலைத்தான் உருவாக்கும் என்பதால் விநியோகஸ்தர்கள் போராட்டத்தை நிறுத்தி விட்டார்கள் என்பதாக சொல்கிறார்கள்.
இது எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. முருகதாஸ் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வருகிறபோதுதான் ஏதாவது தெரிய வரலாம்.
அடுத்து இன்னொரு செய்தியும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து எடுத்துக்கொண்டிருக்கிற சன் குழுமம் அறிவித்த படம் வெளி வருமா,ரஜினி நடிப்பாரா ,என பல சந்தேகங்களை கிளப்பியிருக்கிறார்கள் .
“தளபதி விஜய் விஷயத்தில் வருமானவரித்த துறை காட்டிய கடுமை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேட்டரில் வருமான வரித்துறை மென்மையான போக்கை கையாண்டதேன் ?” என்று திமுக பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விதான் ரஜினி வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
அது அரசியல். சினிமாவோ தொழில் .இரண்டையும் எப்படி கொண்டு செல்லவேண்டும் என்பதை மாறன் சகோதரர்களுக்கு யாரும் சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை.
சன் குழுமத்தின் ‘தலைவர் 168 ‘ படத்தில் தொடர்ந்து நடிப்பதற்கு ரஜினிகாந்த் தயங்குவதாக சொல்லப்படுகிற செய்தியில் உள் நோக்கம் இருக்கலாம்.. குஷ்பு ,மீனா,உள்ளிட்ட பெருந்தலைகள் நடிக்கவிருக்கிற இந்தப்படம் சிறுத்தை சிவாவின் கனவுப்படமாகும். தேர்தல் காலத்தை அனுசரித்து வரக்கூடிய படமாக இருக்கக்கூடும் என்பதால் இத்தகைய புரளிகளை கிளப்புகிறார்களோ என்னவோ.!
சூப்பர் ஸ்டார் இந்த மாதிரியான பிரச்னைகளை ஜூஸூபி என விலக்கி விட்டு செல்லக் கூடியவர் ,அதனால் சன் குழும படத்தில்தலைவர் கண்டிப்பாக நடிப்பார் என்பதையும் சிலர் சொல்கிறார்கள்.
ஆனால் எது உண்மை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் சொன்னால்தான் தெரிந்து கொள்ள முடியும்.!