கன்னி மாடத்தை மறக்கவே முடியாது. சாண்டில்யனின் அற்புதமான நாவல். அந்த நாவலின் பெயரைத் தாங்கி வெளிவரவிருக்கிற படம்தான் கன்னி மாடம்.
நடிகர்,இயக்குநர் போஸ் வெங்கட் ஆட்டோ டிரைவராக இருந்தபோது சந்தித்த உண்மைச்சம்பவங்களின் நிகழ்வுகளைத்தான் படமாக எடுத்திருக்கிறார்கள். அது வரை பார்த்த இசை வெளியீட்டு விழாக்களை விட கன்னிமாடத்தின் இசை வெளியீட்டு விழா படத்தைப்பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது என்பது உண்மை .கன்னிமாடத்தின் டிரெய்லருக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது.
இசை வெளியீட்டு விழாவுக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வந்து வாழ்த்தியது படத்துக்கு பலம். எதிர்பாராத விருந்தாளியாக வந்திருந்தவர் பட்டிமன்ற லியோனி. போஸ் வெங்கட்டின் நண்பர்.
போஸ் வெங்கட் இயக்குநராக தன்னை திரை உலகத்தில் பதிவு செய்து கொள்வதற்கு கன்னிமாடம் பெரிதும் துணை நிற்கும் என்பதை திரையிட்டுக் காட்டிய சில காட்சிகளே உறுதி செய்தன.
பாடகராக இந்த படத்தில் அறிமுகம் ஆகியிருப்பவர் ரோபோ சங்கர்.
வழக்கம்போல நகைச்சுவையுடன் அவர் பேசினார்.
நான் பல இசை விழாக்களில் பங்கு கொண்டிருக்கிறேன் ஆனால் இந்த மேடை எனக்கு மிக நெருக்கமானது. முதல் முறையாக பாடகராக இங்கு மேடையேறியுள்ளேன். என்னை பாடகராக அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் ஹரி சாய்க்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மேலும் இப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு அண்ணன் போஸ் வெங்கட்டுக்கு நன்றி. அவர் என் வாழ்வில் ஒவ்வொரு படியிலும் பேருதவியாக நின்றிருக்கிறார்.பல வருடங்கள் முன்பாகவே இந்தக்கதையை என்னிடம் கூறியுள்ளார். ஒரு அற்புதமான படைப்பாக இப்படம் இருக்கும். தான் முதன் முதலாக பணிபுரிந்த ஆட்டோ டிரைவர் தொழிலை மறக்காமல் இந்தப்படத்தில் அவர்களுக்கு மரியாதை செய்துள்ளார். அவர் இன்னும் பல வெற்றிபடங்களை இயக்கி பெரிய இயக்குநராக வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி”என்று கூறினார்..
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசுகையில் “. நடிகர் போஸ் வெங்கட் சிறப்பான ஆளுமையாளர். அவரை மெட்டி ஒலி தொலைக்காட்சி தொடரில் பார்த்து வியந்திருக்கிறேன். அவரது முகத்தை பார்த்தாலே நம்முள் ஒரு நேர்மறைதன்மை கொண்ட நம்பிக்கை பிறக்கும். நாம் சோர்வாகும் போது, தோல்வி எண்ணங்கள் வரும்போது அவரது முகத்தை பார்த்தாலே போதும் பெரும் நம்பிக்கையை அந்த முகம் தரும். கன்னிமாடம் படம் கண்டிப்பாக நேர்த்தியானதாக இருக்குமென தெரிகிறது. போஸ் வெங்கட் வெகு திறமை வாய்ந்தவர். கன்னி மாடம் வெற்றிபடமாக அமைய வாழ்த்துகள்”என்று வாழ்த்தினார்.
“சமீப காலங்களில் சினிமாவில் சிறு பட்ஜெட்டில் தயாராகும் தரமான படங்களே, சினிமாவின் அனைத்து தரப்பினருக்கும் லாபகரமானதாக அமைகிறது. பெரிய முதலீட்டு படங்கள் வெற்றியடைவது அனைவரையும் இக்கட்டில் வைக்கும் சவாலானாதாக இருக்கிறது. கன்னிமாடம் தரத்தில் உயர்ந்து விளங்குகிற படைப்பாக இருக்கிறது. கண்டிப்பாக இப்படம் பெரு வெற்றி பெறும். வாழ்த்துகள்”என்றார்..
நடிகர் சமுத்திரகனி பேசுகையில் “நடிகர் போஸ் வெங்கட் சினிமா மீது பெருங்காதல் கொண்டவர். நாங்கள் எப்போது சந்தித்தாலும் அவர் சினிமா பற்றியே தீவிரமாக பேசிக்கொண்டிருப்பார். அவரின் இந்த கன்னி முயற்சி கண்டிப்பாக தரமானதாகவே இருக்கும். “கன்னி மாடம்” நல்ல வெற்றியடையும். போஸ் வெங்கட்டுக்கு வாழ்த்துகள்”என வாழ்த்தினார்..
திண்டுக்கல் லியோனி,நடிகை காயத்ரி ,நடிகர் பரத் ,இசையமைப்பாளர்
ஒளிப்பதிவாளர் இனியன் ஆகியோரும் பேசினார்கள்.ரூபி பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஹஷீர் மனம் திறந்து பேசினார்.
“போஸ் வெங்கட் முதல் முறையாக கதை கூறியபோதே மிக நல்ல படமாக இப்படம் வரும் எனத் தோன்றியது. உடனடியாக படம் தயாரிக்க ஒப்புக்கொண்டேன். நல்ல படங்களை தருவது என்பதே எங்கள் நிறுவனத்தின் குறிக்கோள். “கன்னி மாடம்” தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படைப்பாக இருக்கும். இப்படத்தை பெரிய அளவில் ரிலீஸ் செய்யும் செண்பகமூர்த்தி அவர்களுக்கு நன்றி.”என பேசினார்.
உண்மையில் செண்பகமூர்த்தி திரை உலகில் மிகவும் முக்கியமான மனிதர் .அவர் தலையிட்டு தமிழகத்தின் எல்லாப்பகுதிகளுக்கும் கொண்டு சென்றுள்ள படங்கள் வெற்றியை பெற்றுள்ளன. தேர்வு செய்து படங்களை கொண்டு சேர்ப்பவர்.