எழுத்து ,இயக்குநர் :ஜெகன் ராஜசேகர் , ஒளிப்பதிவு :என்.சண்முக சுந்தரம் ,இசை :நவீன் ரவீந்தர் , ஆர்ட் : அருண் சங்கர் துரை .
நட்டி ,அனன்யா ,லால் ,மாரிமுத்து ,அஸ்வந்த் .
*************
ஊர் உலகத்தை சுற்றாமல் விநாயகர் அப்பா,அம்மாவை சுற்றி வந்து ஞானப் பழத்தை வாங்கியதை போல இயக்குநர் ஜெகன் ராஜசேகர் அடுக்குமாடி கட்டிடத்துக்குள்ளேயே கதையை சுற்றி இருக்கிறார். புதிய முயற்சி .
ஆர்ட் டைரக்டர் அருண் சங்கர் துரை ,ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரம் இருவரும் பாராட்டுக்குரியவர்கள் என்பதை முதலிலேயே பதிவு செய்து விடலாம். மிகவும் நேர்த்தி. அடுக்குமாடி குடியிருப்பு அப்படியே நிஜமாக பதிவாகி இருக்கிறது .!
சரி,கதை என்ன? வில்லன் லாலின் மகனுக்கு இதயமாற்று சிகிச்சை செய்தேயாக வேண்டும் . அந்த சிறுவனின் ரத்த வகையுள்ள சம வயது சிறுவனின் இதயம்தான் வேண்டும் என்கிற கண்டிஷனை போடுகிறார் டாக்டர். கரெக்ட்டான சிறுவனை தேடிப்பிடித்து அந்த சிறுவனை கொன்று இதயத்தை கொண்டுவா என வில்லன் லால் தன்னுடைய அடிவருடி ரவுடிகளுக்கு உத்தரவு போடுகிறார். அத்தகைய இதயம் கதாநாயகன் நட்டியின் மகனிடம்தானே இருக்க வேண்டும். அந்த சிறுவன் அஷ்வந்தை தேடி அந்த அடுக்கு மாடி கட்டிடம் முழுமையையும் தனது ஆதிக்கத்தில் கொண்டு வந்து லாலும் அடியாட்களும் நடத்துகிற அராஜகம்தான் கதை.
கிட்டத்தட்ட பத்து மாடிகளுக்கும் அதிகமான அந்த கட்டிடத்தில் வாழ்கிற அத்தனை குடிமக்களையும் முட்டாள்களாக்கிய பெருமை இயக்குநருக்கு.! லாஜிக்கை மொத்தமாக விழுங்கி இருக்கிறது திரைக்கதை.!
போலீஸ் ஏன் அக்கறை காட்டவில்லை? அதற்கும் ஒரு காரணம் இல்லாமலா? இன்ஸ்பெக்டர் மாரிமுத்துவின் அக்கா புருசன்தான் லால் !எப்பூடி! ஏரியா இன்ஸ்பெக்டருக்கு மட்டும்தான் போன் பண்ண வேண்டும் என்கிற தலையெழுத்தா? லாலினால் முன்னமே பாதிக்கப் பட்டிருக்கிற ஆர்.எஸ்.சிவாஜியின் லாயர் பிள்ளைக்கு வேறு வழி தெரியாதா? அட போங்கய்யா!
நடிப்பில் நட்டியும் அனன்யாவும் குறையின்றி கேரக்டரை நிறைவு செய்திருக்கிறார்கள். பொடியன் அஸ்வந்தின் “அப்பா பயமா இருக்குபா !”என்கிற உருக்கமான குரல் இன்னும் கேட்கிறது. காட்சி அமைப்பும் மிரட்டல்.
மிரட்டப் பார்த்தார்கள்…முடியவில்லை.!
சினிமா முரசத்தின் மார்க் .2 / 5.