லைகாவின் இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த கொடிய விபத்துக்கு 3 பேர் பலியாகி இருப்பது உலகம் அறிந்த செய்தி.
உதவி இயக்குநரும் பலி ஆகியிருக்கிறார். உலக நாயகன் கமல்ஹாசனின் நண்பர் கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகனும் அவர்களில் ஒருவர் என்பது துயரம் நிறைந்த செய்தி ஆகும்.
இந்த விபத்துக்கு யார் காரணம் என்பதை பிபிசி தமிழுக்கு பேட்டி அளித்த செந்தில்குமார் விவரமாக பேசியிருக்கிறார். அவர் தமிழ்நாடு திரைப்பட ,டி .வி .வெளிப்புற லைட்மேன் சங்கத்தின் தலைவர் ஆவார்.
“பெரிய நடிகர் , இயக்குநரின் படங்களை எடுக்கும்போது கேமரா மேன்கள் பெரிய லைட்கள் வைத்து காட்சியமைக்க நினைக்கிறார்கள். கிரேனில் லைட்களை கட்டச் சொல்லி ஒளிப்பதிவு செய்கிறார்கள். இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்திலும் அதுதான் நடந்துள்ளது
இந்த வகை கிரேன்கள் ஓரளவிற்கு தான் எடையைத் தாங்கும். இன்னும் லைட் வையுங்கள் என்று சொல்லும் போது லைட் மேன் என்ன செய்ய முடியும்?
“அதிக அளவில் கிரேனில் லைட் கட்டியிருக்கிறார்கள். அப்பொழுதே கிரேன் ஒரு பக்கமாக சாய்ந்து இருந்துள்ளது. அதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஷூட்டிங்கிற்கான வேலைகளை செய்திருக்கிறார்கள். கிரேன் ஆப்ரேட் செய்பவர் இதற்கு மேல் எடை அதிகமானால் கிரேன் விழுந்துவிடும் என எச்சரித்ததாக அங்கே பணியில் இருந்தவர்கள் சொல்கிறார்கள். ஆனால், உண்மை என்ன என்பது அங்கே இருந்தவர்களுக்குத் தான் தெரியும்.”
“எங்களுடைய லைட் மேன் ராமராஜனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கிரேன் கால் மேல் விழுந்துள்ளது. இன்னும் அவசர சிகிச்சை பிரிவில் தான் அவர் இருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ செலவை லைகா நிறுவனம் தான் செய்கிறது. லைட் மேன் பற்றி யாரும் கவலைப்படப் போவதில்லை. இனி அவருடைய வாழ்வாதாரம் என்னவாகும் என்பதே கேள்விக்குறி தான்”
“சமீபத்தில் பிகில் படப்பிடிப்பின் போது, இதே மாதிரி அதிக அளவில் லைட் அமைக்க முயற்சித்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் ரோப் அறுந்து விழுந்து எலக்ட்ரீஷியன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். பிரபலமான நபர் இறந்திருந்தால் அந்த செய்தி பெரிய அளவில் வெளியில் பேசப்பட்டிருக்கும். தொழிலாளி இறந்துள்ளதால் அது வெளியே தெரியவில்லை. பிகில் படத்தில் இறந்தவருக்கு நஷ்ட ஈடாக என்ன செய்தார்கள் என்பது இதுவரையில் தெரியவில்லை.”என்கிறார்.
நன்றி ; பிபிசி தமிழ்.