எழுத்து இயக்கம் : போஸ் வெங்கட் ,இசை : ஹரி சாய் ,ஒளிப்பதிவு :இனியன் ஜெ.ஹாரிஸ் ,பாடல்கள் :விவேகா ,போஸ் வெங்கட் ,தயாரிப்பாளர் :ஹஸீர் ,ரூபி பிலிம்ஸ் .
ஸ்ரீராம் கார்த்திக் ,சாயா தேவி ,விஷ்ணு ராமசாமி ,ஆடுகளம் முருகதாஸ் ,கஜராஜ் ,சூப்பர்குட்ஸ் சுப்பிரமணியன் ,லலினா பிரின்ஸ் ,மைம் கோபி ,பிரியங்கா சங்கர்
*************
போஸ் வெங்கட் இயக்குநராக அறிமுகம். வசனமும் அவரே.! சாத்தியமாகுமா அவருக்கு ,இப்படி பல கேள்விகளுடன் அமர்ந்தவர்களுக்கு அவர் சொன்ன பதில் என்னவாக இருக்கும் ? தந்தை பெரியாரின் கருத்துகளை சொல்கிற அவர் நாத்திகம் சார்ந்த படமாக எடுத்திருப்பாரா?
சத்தியமாக நாத்திகம் சார்ந்த படம் இல்லை. சமுதாயம் சார்ந்த படம். இன்றும் நாட்டுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் சாதிய வன்மம் பற்றிய படம். கச்சிதமான காட்சி அமைப்புகள் (சில தவிர்க்கப் பட்டிருக்கலாம். ) காதலும் அதில் தோய்ந்திருக்கிற இன்பமும் துன்பமும் எதிர்பாராமல் நிகழ்கிற விபத்தினால் நேர்கிற விளைவுகளும் மனதை உலுக்குவதும்தான் கதை. இயக்குநர் போஸ் வெங்கட்டுக்கு வாழ்த்துகள் .வெற்றி பெற்றிருக்கிறார்.
உயர்ந்த சாதி பையன் தாழ்ந்த சாதிப்பெண்ணை காதலித்து கல்யாணமும் செய்து கொள்வது திரைக்குப் புதிதல்ல. அவர்கள் சென்னைக்கு வந்த பிறகு ஆட்டோ டிரைவர்களால் ஆதரிக்கப்பட்டாலும் என்னென்ன நிகழ்கிறது என்பதை ஜிகினா தடவாமல் வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறார்கள்.இப்படிப்பட்ட நல்ல ஆட்டோ டிரைவர்களும் சென்னையில் இருக்கிறார்கள் என்பதை படத்தில் பார்க்கிறபோது ஆச்சரியம் வருகிறது.ஒருவேளை அது பெரியார் ஆட்டோ ஸ்டாண்டாக இருப்பதால் இருக்கலாமோ!
அன்பு ,மலர் ,கதிர் ஆகிய மூன்று கேரக்டர்களும் மனதில் பதிந்து விடுகிறார்கள். இளமை பருவத்துக்கே உரிய அவசரம், எப்படியும் வாழ்ந்து விடலாம் என்கிற நம்பிக்கையுடன் ஒடி வருகிற காதலர்களின் கதையை கண்கள் கசிய சொல்லியிருக்கிறார்கள்.
அன்பாக நடித்திருக்கிற ஸ்ரீராம் கார்த்திக் மலராக வரும் சாயாதேவி ,கதிராக வருகிற விஷ்ணு ராமசாமி மூவரும் அறிமுக நடிகர்கள் என்பதை நம்பமுடியவில்லை. வெகு இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
ஸ்டெல்லா கதிர் இருவருக்கும் இடையேயான நட்பினை காதலாக மாற்றாமல் தடம் மாற்றி விட்டதில் என்ன பலன்? மலருக்கு ஆதரவளித்து வரும் கதிருக்கு அதனால் என்ன கஷ்டம் வந்து விடப்போகிறது?
ஸ்கொயர் ஸ்டாருக்கு சிவாஜி படப்பாடலை கொடுத்து மலரை வலிப்பு நோயினால் துடிக்கவிட்டதில் இரக்கம் வரவில்லை.ஆனால் இயக்குநரின் தாராள மனம் தெரிகிறது.இரும்பை பிடித்தால் வலிப்பு நின்று விடும் என்பது பிழை.
ரோபோ சங்கரின் மனைவிக்கு நல்ல கேரக்டர் .இரும்பு மனுஷி போல தோற்றமளித்தாலும் அதில் இரக்கமும் சுரக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு.வேறு வகையான கேரக்டர்களுக்கும் பொருந்துவா ர்.
உண்மையை சொல்வதானால் இந்த படத்தில்தான் மெல்லிசையை அனுபவிக்க முடிந்தது. அதில் ஒரு பாடல் இளையராஜாவின் அப்பட்டமான தழுவலாக இருந்தாலும். (அந்த பாடலில் சிவகுமார் லட் சுமி இருவரும் இந்த விமர்சகனுக்கு தெரிகிறார்கள் ) சுகமான இசை செவிகளில் டமாரம் அடிக்காத இசை.!
சிரிக்க வைப்பது மட்டுமே ஒரு படத்தின் நோக்கமல்ல .பார்க்கிறவர்கள் மனதில் நல்லவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும் .அது கன்னிமாடத்தில் இருக்கிறது.
ஒரு நல்ல படத்தை பார்க்கிறோம் என்கிற உணர்வு ஏற்படுவதற்கு ஒளிப்பதிவும் முக்கிய காரணம் .இனியன் ஜெ.ஹாரிஸுக்கு வாழ்த்துகள்.
ஆடுகளம் முருகதாசுக்கு நல்ல வாய்ப்பு. அவரும் பயன் படுத்தியிருக்கிறார். ஆனாலும் சில காட்சிகளை வசனத்தின் வழியாகவே கடத்தியிருக்கமுடியும் .காட்சிப்படுத்தல் தேவை இல்லை. எடிட்டர் ரிஷான் ஜெய்னி கத்திரி போடுவதற்கு கிடைத்த சில வாய்ப்பை நழுவ விட்டிருக்கிறார்.
படம் பார்க்கலாம்.
சினிமா முரசத்தின் மார்க் . 3.5 / 5