திரைப்படங்களின் தலைப்புகளை மட்டும் இல்லாமல் பாடல்களையும் டி .வி. சீரியல்களில் பயன்படுத்தி வருகிறார்கள்.
அரசு அதிகாரியின் கட்டுப்பாட்டில் தயாரிப்பாளர்கள் சங்கம் நடந்து வருவதால் இந்த திருட்டுத் தலைப்பு பற்றி கவலைப்படுவதில்லை.
எவன் எக்கேடு கெட்டால் என்ன என்கிற மனப்பான்மையோ என்னவோ!
தலைப்புத் திருட்டுப் பற்றி பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கேயார் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
சொந்த தலைப்புகள் சுடப் பட்டதால் கவலை,கடுங்கோபம்.!
இனி அவரது அறிக்கை பேசுகிறது.
“டி.வி தொடர்களால் சினிமா ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. சமீப காலமாக தொலைக்காட்சி தொடர்களில், அனுமதியில்லாமல் சினிமா தலைப்புகளை பயன்தடுத்துவதும் ஒரு வாடிக்கையாகிவிட்டது.
ஒரு திரைப்படத்திற்கு தலைப்பு என்பது மிக முக்கியமானது. பல நாட்கள் சிந்தனை செய்து, பல தலைப்புக்கள் தேர்ந்தெடுத்து, அதில் ஒரு புதிய தலைப்பை முடிவு செய்து, கடைசியில் அந்தந்த சங்கங்களில் பதிவு செய்வதென்பது நடைமுறையில் உள்ள ஒரு விஷயம்.
ஒரு திரைப்படத்திற்கு தலைப்பு என்பது மிக முக்கியமானது. பல நாட்கள் சிந்தனை செய்து, பல தலைப்புக்கள் தேர்ந்தெடுத்து, அதில் ஒரு புதிய தலைப்பை முடிவு செய்து, கடைசியில் அந்தந்த சங்கங்களில் பதிவு செய்வதென்பது நடைமுறையில் உள்ள ஒரு விஷயம்.
ஒருவேளை, தெரிந்தெடுக்கும் தலைப்பு வேறொரு தயாரிப்பாளர் பதிவு செய்திருந்தாலும் அல்லது அந்த தலைப்பில் வேறொரு தயாரிப்பாளர் படத்தை வெளியிட்டிருந்தாலும், நமக்கு அந்த தலைப்பு வேண்டுமென்றாலும், முறையாக அந்த தயாரிப்பாளரிடம் அனுமதி பெற்றோ ஒரு தொகை கொடுத்து வாங்கியோ சங்கத்தில் செய்வது நடைமுறையில் உள்ளது.
ஆக ஒரு படத்திற்கு முக்கியமாக தலைப்பு தான் அங்கீகாரம். தயாரிப்பாளருக்கு மட்டுமல்ல, இயக்குனர் மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் தலைப்பு தான் அங்கீகாரம்.
சில தலைப்புகளாலேயே மக்கள் ஆர்வத்துடன் முதல் நாளே படம் பார்க்கக் கூடிய சூழ்நிலையும் உண்டு. சில நேரங்களில் தலைப்பு பிரச்சனை, பெரிய பஞ்சாயத்தாக விஸ்வரூபம் எடுத்து, நீதிமன்றம் வரைக்கும் சென்று படத்தின் வெளியீட்டைக் கூட தடை செய்திருக்கிறது.
ஆனால், டி.வி தொடர்களில் சர்வ சாதாரணமாக சினிமா தலைப்புகளைப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது மிக வேடிக்கையாக இருக்கிறது.
என்னுடைய முதல் படமான ஈரமான ரோஜாவே, புது முகங்கள் நடித்து நான் தயாரித்து இயக்கிய 1991-ம் ஆண்டு பொங்கல் அன்று வெளியானது.
இந்தப் படத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்மதுரை படமும் மற்ற ஏழு படங்களும் வெளியானது. அந்தப் போட்டியிலும், புதுமுகங்கள் நடித்த ஈரமான ரோஜாவே வெற்றிகரமாக 125 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.
ஒரு புது இயக்குநராக தமிழ் திரையுலகில் எனக்கு அங்கீகாரம் கிடைத்தது முதல் வெற்றிப்படமான ஈரமான ரோஜாவே மூலமாகத் தான்.
தற்போது, என் படத்தின் தலைப்பை ‘GOOGLE’ –ல் type செய்தால், ஈரமான ரோஜாவே என்ற தமிழ் சீரியல் தான் முதலில் வருகிறது. இதுமட்டுமில்லாது என் மற்ற படங்களான இரட்டை ரோஜா, பூவே பூச்சூடவா போன்ற படங்களின் தலைப்புகளும் டி.வி. தொடர்களில் பயன்படுத்தி வருகிறார்கள்.
இது நியாயமுமில்லை தர்மமும் இல்லை. என் படத்தின் தலைப்புகளைப் போலவே மற்ற பல தயாரிப்பாளர்களின், இயக்குனர்களின் தலைப்புகளையும் தொடர்களில் பயன்படுத்துவது வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
தலைப்புகள் சம்பந்தமாக இவர்கள் யாரிடமும் முறையாக அனுமதி வாங்குவதும் இல்லை. முறையில்லாமல் எங்கள் சினிமா தலைப்புகளை பயன்படுத்தி ஆதாயம் தேடி கொள்கிறார்கள்.
ஆனால், சம்பந்தப்பட்டவர்களை அணுகி, அனுமதி பெற வேண்டும் என்ற ஒரு நாகரிகம் கூட தெரியாமல் இருக்கிறார்கள். ஒரு தலைப்பு கூட சுயமாக சிந்திக்க தெரியாமல்டி.வி. சீரியல் எடுப்பது மிக வேதனையாக இருக்கிறது. இது கண்டனத்திற்கும் உரியது.
ஆகவே டி.வி தொடர்களுக்கும், சினிமாவைப் போல் தணிக்கை என்று ஒன்று இருந்தால், இப்படிப்பட்ட முறைகேடுகளைத் தவிர்க்கலாம். இந்த முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, சட்டப்படி நீதிமன்றத்தை அணுக உள்ளேன்.”என்று அறிக்கையில் கூறி இருக்கிறார்.
டி.வி.தொடர்களை எடுப்பது திரைப்படங்களில் நடித்தவர்கள் என்பதும் திரைப்படத் தொடர்புகளில் இன்னமும் இருப்பவர்கள்தான் என்பது குறிப்பிடத் தகுந்தது.
ராதிகா சரத்குமார் , குஷ்பூ சுந்தர் ,பி.ஆர்.விஜயலட்சுமி ,குட்டி பத்மினி போன்றவர்களை உதாரணமாக சொல்லலாம். ஆக தெரிந்தே தான் தலைப்புகள் பறி போகின்றன.திரு கேயார்.
இத்தனை காலமும் சும்மா இருந்து விட்டு தற்போது பொங்குவது ஏன் என்பது தெரியவில்லை.தேர்தல் எதுவும் வருகிறதா?