“சொன்னது நீதானா சொல்..சொல் ,என்னுயிரே !” என்கிற பாடலை சோகமுடன் பாடியிருப்பார் நடிகை தேவிகா.
அதே பாடலை ஆச்சரியத்துடன் அப்பாவி மக்கள் பாடினால் எப்படி இருக்கும்?
அத்தகைய ஆச்சரியத்தில் அமிழ்ந்து போயிருக்கிறார்கள் அரசியல்வாதிகளும் ,தமிழக மக்களும்.!
“ஒரு முஸ்லீமுக்கு ஆபத்து என்றாலும் அங்கே இந்த ரஜினி முதலில் நிற்பேன் “என்பதாக ரஜினிகாந்த் சொல்லியிருந்ததை சுட்டிக்காட்டி “எங்கே ரஜினிகாந்த் ” என்று கேள்வி எழுப்பினார்கள். குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து டெல்லியில் மக்கள் தொடர்ந்து போராடி வருவது தொடர்பான கேள்வியாக அது இருந்தது.
இந்த போராட்டத்தில் போலீஸ்காரர் ,ஐ.பி.அதிகாரி உள்பட 24 பேர் வன்முறையாளர்களால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இதை பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் இன்று பத்திரிகையாளர்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்கள்.
அதற்கு ரஜினி என்ன சொன்னார் என்பது இங்கு தொகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
“மத்திய அரசின் ரகசிய உளவுத்துறையின் தோல்வி என்பது மத்திய உள்துறை அமைச்சகத்தின் தோல்வியே ! வன்முறையை அடக்க முடியவில்லை என்றால் பதவியை விட்டு விலகியிருக்க வேண்டும்.ராஜினாமா பண்ணிட்டு போ.!
மத்திய, மாநில அரசுகள் வன்முறையை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டும்.
நான் மத்திய அரசை கடுமையாக கண்டிக்கிறேன். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வந்திருக்கிறபோது மிகவும் எச்சரிக்கையுடன் நடந்திருக்க வேண்டும். உளவுத் துறை சரியாக செயல்படவில்லை.வன்முறையை இரும்புக்கரம் கொண்டு அடங்கியிருக்க வேண்டும்..
என்னை பா.ஜ .க.வின் ஊதுகுழல் ,எனக்கு பா.ஜ.க .பின்னணியில் இருக்கிறது என்றெல்லாம் சொல்கிறார்கள். மூத்த பத்திரிகையாளர்கள் கூட இப்படி சொல்வதுதான் வேதனையாக இருக்கிறது.”என்று ரஜினி கூறி இருக்கிறார்.
உலகநாயகன் வரவேற்பு.
ரஜினியின் கருத்துக்கு உலகநாயகன் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்.
“சபாஷ் ரஜினி அவர்களே!அப்படி வாங்க.!இந்த வழி நல்ல வழி !தனி வழி இல்லை இனமே நடக்கும் ராஜபாட்டை.வாழ்த்துகள் ” என்பதாக சொல்லியிருக்கிறார்