கதை,திரைக்கதை ,வசனம் ,இயக்கம் :மோகன். ஒளிப்பதிவு : மனோஜ் நாராயணன் ,இசை :ஜூபின்.
ரிச்சர்டு ரிஷி ,ஷீலா ராஜ்குமார்.கருணாஸ் ,
************
உங்கள் விமர்சகனின் 50 ஆண்டு கால அனுபவத்தில் பத்திரிகையாளர்களுக்கான தனித்த ஷோவில் போலீஸ் பாதுகாப்புடன் படம் பார்த்ததில்லை. மேலும் அரசியல்வாதிகள், குறிப்பிட்ட சமூகம் சார்ந்த பிரமுகர்கள் என இருக்கைகளில் இருந்தார்கள். பா.ம.க.வின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ,இவரது சம்பந்தி காங்.கட்சி கிருஷ்ணசாமி ,ஜி.கே.மணி ஆகியோர் தியேட்டரில் படம் பார்க்கப்போகிறார்கள் என்கிற செய்தியும் கிடைத்தது.
அப்படி என்ன படத்தில் இருக்கிறது என்கிற உந்துதல் நமக்கு.
சாதி ஒழிய வேண்டும் என்று சொல்வதை திரவுபதி ஏற்கவில்லை. சாதி வேண்டும் என்கிறாள் இந்த திரௌபதி .! பாரதியை ஒரே போடாக போட்டுத் தள்ளிவிட்டாள்.
பணக்காரப்பெண்ணாக பார்த்து காதல் பண்ணி அவளை வசியப்படுத்தி கல்யாணம் செய்து கொண்டு உல்லாசமாக வாழ வேண்டும் என ஒரு கரு. இதை வைத்துக் கொண்டு ஆணவக் கொலையை படமாக்கியிருக்கிறார்கள். ஆக ஆணவக்கொலை என்பது எந்த சாதியிலும் நடக்கலாம்.
கதையின் களம் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு ஊர். அரசியல்வாதிகள் சிலர் இடங்களை ஆக்கிரமித்தலும் ,கட்டப்பஞ்சாயத்து பண்ணுவதும் ,இணங்காதவர்களை மட்டை செய்வதும் ஆங்காங்கே குறியீடுகள் வழியாக உணர்த்துகிறார்கள்.
பாவம் பாரதி.! அவனும் இந்த சாதி சண்டையில் ஒரு குறியீடாக வருகிறான்.
தணிக்கையாளர்கள் அதிகமான இடங்களில் வசனங்களை ஊமையாக்கி இருக்கிறார்கள். இதனால் வேண்டாத வில்லங்கங்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. ‘கிரவுட் பண்டட்’ என்கிற முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப்படத்தின் முன்னோட்டக்காட்சி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.அந்த அளவுக்கு படம் பரபரப்பை ஏற்படுத்துகிறதா?
கதையின் நாயகன் ரிச்சர்ட் ரிஷி. இவர் தன்னுடைய மனைவி,கொழுந்தியாளை போட்டுத் தள்ளியதாக தண்டனைக்கு ஆளாகி இருப்பவர். இவர் ஜாமீனில் வெளிவந்து திரௌபதியின் சபதத்தை நிறைவேற்றுகிறார். அரசியல் வாதி ,போலி வழக்குரைஞர் என சிலர் கொல்ல ப் படுகிறார்கள். அழுந்த தலை வாரியிருக்கிற அந்த அரசியல்வாதி முக்கிய கட்சி ஒன்றின் பிரமுகரை நினைவூட்டுகிறார்.திரௌபதி என்ன சபதம் செய்திருந்தாள் என்பது படத்தில்.!
அவள் சாகவில்லை என்பது பிறகுதான் தெரியும்.
இயக்குநர் மோகனின் கனவுப்படம் என்பது காட்சிகளிலும் ,சில வசனங்களிலும் தெரிகிறது.
வழக்குரைஞராக கருணாஸ் கடைசி காட்சியில் வந்தாலும் கலகலப்பு இருக்கிறது. பேட்டி கொடுக்கிற இடத்தில் அவரது கட்சியையும் நினைவுபடுத்துகிறார்கள் .
இந்த படத்துக்கு பா.ம.க.,பாஜக வினர் ரிப்பீட்டட் ஆடியன்ஸ் கொடுத்தால் போதும், கல்லா நிறையும்.!