எழுத்து ,இயக்கம் :எஸ்.ஹரி உத்ரா ,இசை :தேனிசைத் தென்றல் தேவா ,கே.ஜெய்கிருஷ் ,ஒளிப்பதிவு :பி.வாசு ,பாடல்கள் : கவிப்பேரரசு வைரமுத்து ,
சிவா நிஷாந்த் ,ஆண்டனி ,ஐரா ,திவ்யா ,கஜராஜ் ,
*******
ஒருவனை அவமானப்படுத்தி வெளியேற்றுவதற்கு பெயர் கல்தா.
“அமைச்சருக்கு கல்தா!” “எம்.எல்.ஏ.வுக்கு கட்சியிலிருந்து கல்தா “என்பது போன்ற வார்த்தைகளை கேட்டுப்பழகியிருக்கிறோம்.
இந்த படத்தில் யாருக்கு காலதா கொடுக்க சொல்கிறார் இயக்குனர் ஹரி உத்ரா?
“கேரளாவிலிருந்து மாமிச கழிவுகள் ,மருத்துவக்கழிவுகள் ஆகியவைகளை கொண்டு வரும் இந்த நோய்க்கிட்டங்கியை தமிழகத்தில் கொட்டுவதற்கு இடம் கொடுக்கும் அரசியல்வாதிகள் அதிகாரிகளுக்கு கல்தா கொடுங்கள் “என்று சொல்லியிருக்கிறார்.
சிறந்த கருத்து,மறுப்பதற்கில்லை. சமூக பொறுப்புணர்வு வற்றிக்கொண்டிருக்கிற காலகட்டத்தில் இப்படியொரு கதையை தூக்கிவைத்துக் கொண்டிருக்கிறார் ஹரி உத்ரா.
இந்த படத்துக்கு மக்கள் எத்தகைய ஆதரவு கொடுக்க வேண்டும் ? கருத்துகளை புறம் தள்ளி காமத்துக்கு பூஜை செய்கிறவர்கள் மத்தியில் கல்தா கவனிக்கப்படுமா?
பிற மாநிலங்களில் இருந்து மருத்துவக்கழிவுகள் மாமிசக்கழிவுகளை மற்றோரு மாநிலத்தில் கொட்டுவது குற்றம் என்றாலும் அந்த குற்றத்துக்கு தமிழக அரசியல்வாதிகள் ,அதிகாரிகள் பணத்தை வாங்கிக்கொண்டு அனுமதிக்கிறார்கள்.தட்டிக்கேட்கிற மக்களையும் அடிக்கிறார்கள் இன்னும் சொல்வதானால் வதைக்கிறார்கள்.அப்படி வதைபடுகிறவர்கள்தான் கேரளா எல்லையோர கிராமத்தில் வாழ்கிற தமிழக எல்லையை சேர்ந்த சிவாவும் ஆண்டனியும்!
பொங்கி எழுந்து போராடியும் காசு வாங்கி பிழைக்கும் கவுன்சிலர் போலீஸ் துரையின் உதவியுடன் அடக்கி விடுகிறார்.ஆனால் கழிவுகளின் காரணமாக பரவுகின்ற நோய்களுக்கு கிராமமக்கள் பலியாகிறார்கள்.போராடுகிற ஆண்டனியின் மனைவி நோயினால் மரணம் அடைய முழு நேரக்குடிகாரனாகிறார் ஆண்டனி.
நிறை போதையாக இருந்தாலும் கழிவுகளை ஏற்றி வரும் கேரள லாரியை தடுத்து நிறுத்திய ஆண்டனியை போட்டுத்தள்ளிவிடுகிறார் கவுன்சிலர்.
சிவா நிஷாந்த் ,இவரின் அப்பா கஜராஜ் இருவரும் போராட்டத்தை முன்னெடுக்க நோயின் கொடுமையினால் கஜராஜும் காலி.?
இதற்கு பின்னர் என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.!
நாயகனாக வருகிற சிவா நிஷாந்த் புதுமுகம் என்கிற அச்சம் இல்லாமல் நடித்திருக்கிறார். தமிழ்ப்படத்துக்கு அவசியமான டான்சும் சிறப்பு. ஆனாலும் இந்த படத்தில் அதிக வாய்ப்பு இல்லை. நல்ல நடிகர்.
மேற்குத் தொடர்ச்சி மலை ஆண்டனிக்கு அருமையான வாய்ப்பு. மனைவியா ,மக்களா என்கிற இரட்டைத் தவிப்பிலும் செம்மையா நடிப்பு வெளிப்படுகிறது .போராளியின் குணத்தை மரணத்திலும் எதிரொலிக்க செய்திருக்கிறார்.
அப்பாவாக வருகிற கஜராஜ்க்கு முன்னணி இயக்குநர்கள் வாய்ப்பளித்தால் அவருக்குள் இருக்கிற குணச்சித்திரம் நிச்சயமாக வெளிப்படும்.
அப்புக்குட்டியை வில்லனாக்கியவர்கள் அவரது கேரக்டரை முழுமையாக்கவில்லை.
சுருக்கமாக சொல்வதென்றால் காமடியாக்கி இருக்கிறார்கள். முற்பாதியில் இருந்த தெளிவான திரைக்கதை பிற்பாதியில் இல்லை.
கல்தா பாடல் கவனத்தை ஏற்கவில்லை.
ஹரிஉத்ரா எடுத்துக்கொண்ட பிரச்னை, அதை தைரியமாக சொன்ன விதமும் இவற்றுக்காக சினிமா முரசம் கொடுக்கும் மார்க்.2 / 5