அரசியல் கட்சியின் கட்டமைப்பு என்பது திடீர் புளியோதரை மாதிரி இல்லை. கிராமம் தொடங்கி மாநகரம் வரை உண்மையாக உழைக்கிற தொண்டர்கள் அமைந்த குழுக்களை அமைத்ததாக வேண்டும்.
இத்தகைய குழுக்களை அமைப்பது கேப்டன் விஜயகாந்துக்கு சாத்தியம் ஆகியது.
உலகநாயகன் கமல்ஹாசனுக்கு சாத்தியமானது.
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் சாத்தியமாகி இருக்கிறது. நாளை தளபதி விஜய்க்கும் சாத்தியம் ஆகலாம்.
இவர்கள் மன்றங்கள் என்கிற அமைப்புகள் ரீதியாக அந்தந்த பகுதி மக்களிடம் வேர் பிடித்திருக்கிறார்கள்.தங்களின் அபிமானத்துக்குரிய நடிகர்களின் புகழ் அங்கு பரவுவதற்கு காரணமாக ரசிகர்கள்தான் இருக்கிறார்கள்.
இவர்களை வைத்துதான் கட்சியின் கட்டமைப்பு தொடங்குகிறது.
இந்த நிலையில்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிக மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றி நம்பிக்கைக்குரியவர்களை பொறுப்புகளில் நியமித்து இருக்கிறார். இதற்காக அவர் ஓராண்டாக இரகசியமாக செயல்பட்டு வந்திருக்கிறார்.
அவர் வருவாரா மாட்டாரா என்பதெல்லாம் ஏனைய கட்சிகள் தங்களது கட்சியில் இருக்கிற ரசிகர்களை குழப்புவதற்கே,தவிர உண்மை இல்லை.ரஜினி அரசியலுக்கு வருவது அவரது கட்டாயம்.!
தமிழக சட்டசபைக்கான தேர்தல் நடப்பதற்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் ரஜினிகாந்த் அவரது புதிய கட்சிக்கான ஆரம்ப கட்ட வேலைகளை முடுக்கி விடுகிற நிலை ஏற்பட்டு இருக்கிறது
அவரைப்பற்றியும் ,அவரையும் பாஜகவையும் இணைத்துப் பேசுவது பற்றியும் ,இசுலாமிய மக்களுக்கு எதிரானவர் என்கிற பிம்பம் பற்றியும் அவர் தனது விளக்கத்தை மக்களிடம் சேர்க்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் .பாஜகவின் ஊதுகுழலாக தான் இல்லை என்பதாக சொன்னாலும் மக்கள் நம்பவேண்டுமல்லவா?
அவரது ஆன்மீக அரசியல் பிற மதங்களை புண்படுத்துவதாக அமைந்து விடக்கூடாதல்லவா ?
மத்திய அரசின் குடியுரிமை சட்டம் பற்றிய அதிருப்தியில் தமிழக மக்கள் இருக்கிறார்கள். அரசுக்கு சாதகமாக இருக்கிற இசுலாமிய பிரமுகர்களை அந்த சமுதாய மக்களே நம்புவதாக இல்லை. இதனால் தனது மக்கள் இயக்க நிர்வாகிகள் வழியாக அந்த சட்டத்தைப் பற்றிய விளக்கத்தை சொல்ல வேண்டிய அவசியம் ,கட்டாயம் ரஜினிக்கு இருக்கிறது.
இந்த சட்டமே தனது கட்சியின் பின்னடைவுக்கு காரணமாக இருந்து விடக்கூடாது என்பதில் அவர் கவனமுடன் இருக்கிறார் என்கிறார்கள்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் விஷமிகள் ஊடுருவி இருந்தார்கள் என்று அவர் பேசியது ,டெல்லி வன்முறையைக்கண்டித்து பாஜக அரசுக்கு எதிராக பதவி விலகல் பற்றி அவர் தெரிவித்த கருத்து இவையெல்லாம் மக்கள் மத்தியில் அதிருப்தியையே ஏற்படுத்தி இருக்கின்றன. சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு மீடியாக்கள் வழியாக அவர் ஒரு பரபரப்பு அரசியல்வாதியாகவே இருக்கிறார்.தன்னை நம்புகிற மக்கள் மன்ற நிர்வாகிகளை இவையெல்லாம் குழப்பி விடக்கூடாதல்லவா !
இதற்கிடையில் நாளையோ அல்லது நாளை மறுநாளோ தனது ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளை சந்தித்துப் பேசப்போவதாக கடந்த இரண்டு நாளாக செய்தி ஓடிக் கொண்டிருக்கிறது.
கட்சி செயல்பாடு, மாநாடு, கூட்டணியா, தனித்துப் போட்டியா என்பது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து, ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள். கட்சி பெயரையும் இறுதி செய்ய வாய்ப்பு இருக்கிறது.வரும் ஆகஸ்ட் மாதம் தனது புதிய பட அறிவிப்பு அல்லது,செப்டம்பரில் நடத்தப்போகும் மாநாட்டில் தனது கட்சி தொடக்கம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
இவையெல்லாம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடப்பதை பொருத்து செய்தியாக மாறும். இல்லையேல் வெறும் வாயில் அவல் மெல்லும் கதைதான்.!
நாளையும் நாளை மறுநாளும் போயஸ் கார்டன் ஏரியா களைகட்டும் என எதிர்பார்க்கலாம்.