கவிப்பேரரசு வைரமுத்து, கலைஞர், பேராசிரியர் இருவருடனும் நெருங்கிய நட்பில் இருந்தவர். திராவிட இயக்கத்தின் போராளி. உறுப்பினராக இல்லையென்றாலும் இவர் ஒரு திமுக. அதாவது தமிழினப் போராளி.
அவரது இரங்கல் செய்தி.
திராவிடப் பேரியக்கத்தின் மூத்த பெருந்தலைவர் மறைந்து போனார்.
மரணத்தை மன்னிக்க முடியாது. ஆனால் மரணத்தை வெல்ல முடியும்.
பேராசிரியர் வாழ்ந்த பெருவாழ்வு, மரணத்தை வென்றிருக்கிறது.
97 ஆண்டுகால நெடு வாழ்வு,
78 ஆண்டுகாலப் பொது வாழ்வு,
திராவிட முன்னேற்றக்கழகத்தில் 43 ஆண்டுகாலப் பொதுச் செயலாளர் என்ற பெரும்பொறுப்பு, கலைஞர் என்ற மாபெரும் ஆளுமையோடு முக்கால் நூற்றாண்டு
முறியாத நட்பு என்ற பெருமைகளெல்லாம் பேராசிரியர் என்ற ஒற்றை மனிதனுக்கே உரியவை.
பொதுவாழ்க்கை வாழ்வோர்க்குப் பேராசிரியர் கற்றுக்கொடுத்த பெரும்பாடம் ஒன்றுண்டு.
அவர் வெற்றியால் விரிந்ததுமில்லை; தோல்வியால் சுருங்கியதுமில்லை.
கசப்புகளை விழுங்கிவிடுவதுதான் வாழ்வை இனிக்கச் செய்யும் வழி என்பது அவரது வாழ்வியல் கொள்கை.
தன் வாழ்நாள் முழுக்க ஒரே இயக்கத்தில் தடம் மாறாமலும் தடுமாறாமலும் இருந்தது இவர் சிறப்பு என்பார்கள்.
‘அது அவர் உருவாக்கிய கட்சி, அதைவிட்டு எங்கே போவார்?’ என்று கலைஞர் அவர் பெருமைக்குப் பெருமை சேர்த்தார்.
ஒரு தமிழ்ப் பேராசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி, தமிழ் இனத்தின் பேராசிரியராய் முடிந்திருக்கிறது அவரது முழுவாழ்வு.
அவர் தொட்டது பகுத்தறிவு; நிறைந்ததும் பகுத்தறிவுதான்.
அவர் பொதுவாழ்வின் தொடக்கப் புள்ளி இனமானம்; முற்றுப் புள்ளியும் இனமானம்தான்.
இடியின் குரல், மின்னலின் வேகம், தீயின் தீவிரம், புயலின் உரையாடல் அனைத்தும் கொண்ட பெரும் பேச்சாளர் பேசுவதை நிறுத்திக்கொண்டார்.
எலும்பும் நரம்பும் சதையும் கொண்ட உடல் மறைந்து போகிறது.
எண்ணமும் கொள்கையும் முனைப்பும் கொண்ட தத்துவங்கள் மறைவதில்லை.
பேராசிரியர் தத்துவமாக வாழ்கிறார்.
பேராசிரியரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும், தன் அரசியல் ஆசானை இழந்து வாடும்தளபதி மு.க.ஸ்டாலினுக்கும் , தங்களின் பொதுச் செயலாளரை இழந்து வாடும் கழகத்தார்க்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.