மருத்துவமனைகளில் இருந்து குழந்தைகள் காணாமல் போவதும் .அப்படி மீட்கப்பட்ட குழந்தைகள் மறுநாளே மரணம் அடைவதும்….அது ஒரு தொடர்கதையாக இருக்கிறது.
இதற்கு காவல்துறையின் தலைமை ஆதரவு…இதே நேரத்தில் எப்படியும் அந்த மர்மத்தை கண்டு பிடிக்க வேண்டும் என்கிற ஆவேசத்துடன் மற்றோரு போலீஸ் அதிகாரி…இதனின் விரிவாக்கம்தான் ‘வால்டர்.’
அறிமுக இயக்குநர் யு .அன்புவின் முதல் படம். முதல் பெண் ஐ.பி.எஸ்.அதிகாரியான திலகவதியின் மகன் டாக்டர் பிரபு திலக் ,திருமதி ஸ்ருதி திலக் இணைந்து தயாரித்திருக்கிற படம் வால்டர்.இந்த படத்தின் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்வு நடந்தது.
முதன்மை நாயகனாக சிபி சத்யராஜ் ,இவருடன் இணைந்து நட்டி என்கிற நட்ராஜன் சுப்பிரமணியன் ,ஷிரின் காஞ்ச்வாலா ,பவா செல்லத்துரை ,சனம் ஷெட்டி ,யாமினி சந்தர் ,ரித்விகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
தர்மபிரகாஷ் என்கிற புதியவர்தான் இசை.
“யாரைத் தேடி நெஞ்சமே “என்கிற பாடல் மெல்லிசையாக மனதை வருடியது. ராசாமதியின் ஒளிப்பதிவு பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.பாடலும் ஒளிப்பதிவும் அந்த காட்சியின் முக்கியத்தை வெளிப்படுத்தின.
ஆணவக்கொலைகளை பார்த்து வெளிறிக் கிடக்கும் கண்களுக்கு மேகமலையின் குளுமையான காட்சிகளை பார்த்தால் ஏற்படுகிற மகிழ்வு ‘வால்டரின் ‘அந்த பாடல் காட்சியில் இருந்தது.
வரவேற்றுப் பேசியபோது தயாரிப்பாளர் டாக்டர் பிரபு திலக்கின் உள்ளத்தின் அடித்தளத்தில் படுத்துக்கிடந்த உணர்வுகளை வெளிக்கொணரும் முயற்சி தெரிந்தது.
ஆனால் அது முழுமையாக வெளிப்படவில்லை.
“திரைப்படம் என்பது மிகப்பெரிய சாதனம். இந்த பிரம்மாஸ்திரத்தை எப்படி பிரயோகிக்கவேண்டும் என்கிற பொறுப்பு ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் இருக்கிறது. ஒரு திரைப்படம் எப்படி சமூகத்தைப் பாதிக்கிறது ? அண்மையில் வந்த சில படங்களை பார்த்தேன்” என்று சொல்லி வந்தபோது அடுத்துஎன்னை சொல்லப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பினை அதிகப்படுத்தியது.
ஆனால் ‘ஒரு வயதுக்குட்பட்ட பெண் சிசுவின் நிலையைப் பற்றி பாரதி என்ன சொன்னான் என்பதை சொல்லிவிட்டு 1938 ஆம் ஆண்டு வெளிவந்த சேவாசதனம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு சென்று விட்டார்,.கணவனுக்கு ஜீவனாம்சம் தருவதற்கு தயாராக இருப்பதாக அந்த கிளைமாக்ஸ் காட்சி இருந்தது என்பதை பதிவு செய்தார்.
ஆக இந்த மனிதரின் மனதில் இருந்த ஆதங்கம் கடைசி வரை வெளியாகவில்லை.
ஆனால் இந்த செய்தியாளன் கேட்டபோது “இருக்கிறது “என்பதை மட்டும் ஒப்புக்கொண்டார்.
இன்னொரு நல்ல செய்தி. இனிவரும் காலங்களில் சிறு படங்களை பார்த்து விட்டு அதில் சிறந்த படம் எதுவோ அதை தனது “11;11 புரொடக்சன்ஸ் ”வாங்கி வெளியிடும் என்ற டாக்டரின் அறிவிப்புதான் அது.!