கிரேக்க இதிகாசக் கதைகளில் ஒன்றை படிக்க நேர்ந்தது.
அப்படியே வட இந்திய புராணக் கதைகளை தழுவியதைப் போல இருந்தது. யார் யாரை தழுவி இருக்கலாம் என்பதெல்லாம் இங்கு நமக்கு அவசியம் இல்லை.
கதையை மட்டும் பார்க்கலாம்.
குரோனஸ். கிரேக்கத்தின் இறைவன் யுரானஸின் கடைக்குட்டி மகன்.!
இவனது அன்னையின் பெயர் கயா.
மகனுக்கு கட்டளை பிறப்பிக்கிறாள்.
“உன்னுடைய தந்தை யுரானசின் ‘விரை’களை அறுத்து வீசி விடு!”
விசித்திரமான கட்டளை. கணவனின் விரைகளை வெட்டி எறியும் அளவுக்கு தலைமைக் கடவுள் யுரானஸ் என்ன குற்றம் செய்தான்?
அது அவளுக்குத் தான் அதாவது அந்த அம்மாவுக்குத்தான் தெரியும்!
சொன்னபடியே விரைகளை வெட்டி கடலில் வீசி விட்டான்! வெட்டுவதற்கு ஆயுதமாக இருந்தவள் அன்னை கயா. எப்படி இருக்கிறது ?
குரோனஸ் கடவுளின் டிபார்ட்மென்ட். அறுவடை. இவனை வணங்கி விட்டுத்தான் மக்கள் அறுவடையைத் தொடங்குவார்கள். அப்பனின் ‘ஆதாரத்தையே ‘ அறுத்து வீசியவனாச்சே!
இவனுக்குத் திருமணம். சொந்த சகோதரியை திருமணம் செய்து கொண்டவன்.
இந்த குரானசுக்கு ஒரு சாபம் உண்டு! பெத்த அப்பனே கொடுத்த சாபம்தான் !
“அடே மகனே! என் விரைகளை வெட்டி வீசியதால் உனக்கு ஒரு சாபம். உனக்கு பிறக்கும் பிள்ளையினால் தான்நீ சாவாய் .!”
மரணபயம் கடவுளுக்கும் உண்டு. நமது கடவுளர்களுக்கும் இருந்திருக்கிறதே!
இதனால் பிறக்கும் குழந்தைகளை எல்லாம் குரான்ஸ் முழுங்கி விடுவான். கம்சன் நினைவுக்கு வரணுமே!
எத்தனை குழந்தைகளை ரியா இழப்பாள்? அவளும் தாய்தானே! கடைசியாக பெற்ற குழந்தையை ரகசியமாக வேறு இடத்துக்கு கடத்தி விட்டு கணவனிடம் துணியால் சுற்றிய கல்லை கொடுத்து விட்டாள். அவனும் பிரித்துப்பார்க்காமல் விழுங்கி விட்டான்!
தப்பிய குழந்தைதான் ஜீயஸ் .வளர்ந்து ஆளாகி அப்பனுடன் சண்டை போட்டு வயிற்றில் விழுங்கிய ஐந்து பிள்ளைகளையும் வெளியில் எடுத்தான்.
இப்படி போகிறது கதை!
நாளை முதல் 144 தடை உத்திரவு.!
பொழுது போகவில்லை என்பதற்காக முந்தைய பிளாக் பதிவுகளை புரட்டியதில் கிடைத்தது.