Thaarai Thappattai
Cast: M Sasikumar, Varalaxmi Sarathkumar
Rating: 2/5
சேது, நந்தா, பிதாமகன், பரதேசி படங்களைத் தொடர்ந்து இயக்குனர் பாலா,இசை ஞானி இளையராஜாவுடன் இணைந்து ரசிகர்களுக்கு கொடுத்திருக்கும் படம் தான் ‘தாரை தப்பட்டை’
புலவர் சாமி ( ஜி.எம்.குமார் ) கிராமிய இசைக்கலைஞர். டிஸ்கவரி சேனல்அவரை தேடி வந்து பேட்டி எடுத்து செல்லும் அளவுக்கு! அனால் பயங்கர குடிகாரர். அவருடைய ஒரே மகன் (சன்னாசி) சசிகுமாருக்கு தன்னுடைய கலைகள் அனைத்தையும் கற்று கொடுத்துள்ளார். ஆனாலும் கிராமிய இசையால் பெரிய வருமானம் இல்லாமல் இசைக்குழு வைத்திருக்கும் சன்னாசி அன்கோ கஷ்டஜீவனில் காலம் தள்ளும் நிலை. அப்போது அந்தமானுக்கு கரகாட்டம் நடத்த ஒரு வாய்ப்பு வருகிறது.
வரலட்சுமி,(சூறாவளி) சசிகுமாரை ‘மாமா, மாமா’ சுற்றி வரும் குழுவின் மெயின் ஆட்டக்காரி. சசிகுமார், அந்தமானுக்கு சென்ற இடத்தில் இசைக்கச்சேரி முடிந்தவுடன் இசைக்கச்சேரிக்கு அழைத்து வந்த ஏஜன்ட், வரலட்சுமியை தவறான நோக்கத்துடன் அணுக, வரலட்சுமி அவர்களை அடித்து துவைக்கிறாள். இந்த கோபத்தில் இசைக்கச்சேரியை புக் செய்த ஏஜன்ட், சசிகுமார் குரூப்பில் உள்ள அனைவரின் கப்பல் டிக்கெட்டையும் கிழித்துவிடுகிறார். பின்னர் வரலட்சுமி தயவால் ஒரு வழியாய் பணம் திரட்டி ஊர் வந்து சேர்கின்றனர்.இந்நிலையில் வரலட்சுமியின் ஆட்டத்தை தொடர்ந்து பார்த்து வரும் கலெக்டர் ஒருவரின் டிரைவர் என்று கூறிக்கொண்டு வரும் (கருப்பையா ) ஆர்.கே.சுரேஷ், வரலட்சுமியை திருமணம் செய்ய விரும்புவதாக அவருடைய அம்மாவிடம் உருகி கேட்கிறார். வரலட்சுமியின் அம்மா, தனது மகளுக்கு நல்ல வரன் வந்திருப்பதாக சசிகுமாரிடம் கூறி தயவுசெய்து காதலை மறந்துவிடும்படி கெஞ்சிக் கேட்க, தன்னுடன் வரலட்சுமி வறுமையில் வாழ்வதைவிட ,வரலட்சுமியாவது நிம்மதியாக வசதியாக வாழட்டும் என, முடிவு செய்யும் சசிகுமார், வரலட்சுமியின் மனதை மாற்றி கருப்பையாவுக்கு திருமணம் செய்து கொடுக்கிறார்.முதலிரவு அன்று கருப்பையாவின் உண்மை சுயரூபம் வரலட்சுமிக்கு தெரிகிறது. இதையடுத்து வரலட்சுமி வாழ்க்கை என்ன ஆனது? என்பதுதான் மீதிக்கதை.
சசிகுமாரின் இன்னொரு முழுமையான பரிமாணம்தான் சன்னாசி. கரகாட்டக்குழுவின் தலைவனாக வழிநடத்தும் விதம் , தன் இயலாமையை கோபத்தில் குழுவினரிடம் வார்த்தைகளாக தெறிக்க விடுவது, காதலில் கலங்குவது, நடந்ததை உணர்ந்து வெகுண்டெழுவது என தன் பங்களிப்பை மிகச் சிறப்பாக வெளிப்[படுத்தியிருக்கிறார். முதல்பாதியில் வரலட்சுமியை மிரட்டினாலும் உள்ளுக்குள் காதலை வைத்து கொண்டிருப்பதை நளினமாக வெளிப்படுத்தியுள்ளார். தந்தையிடம் கோபமும், தந்தை இறந்த பின் காட்டும் பாசமும், வரலட்சுமியை கருப்பையாவுக்கு கட்டிக்கொடுக்கும்போது மனதை நெகிழ வைத்து விடுகிறார்.
சரத்குமாரின் வாரிசு வரலட்சுமி , இந்த குட்டிப்புலி நடிப்பில்,16,அடி அல்ல!32 அடி பாய்ந்திருக்கிறது. கரகாட்டக்காரி சூறாவளியாக வாழ்ந்திருக்கிறார். மாமனாருடன் உட்கார்ந்து கொண்டு தண்ணி அடிப்பது, சசிகுமாரிடம் மாமா மாமா என்று உருகுவது, மாமனின் பசியைப் போக்க அம்மணமாக கூட ஆடுவேன் என்று கண்ணீருடன் சொல்வது, என்று முதல் பாதியில் எல்லோரையும் பின்னுக்கு தள்ளிவிடுகிறார் வரலட்சுமி. குறிப்பாக வரலட்சுமியின் டான்ஸ். நிஜமான ஆட்டகாரிகூட இந்தளவுக்கு இயல்பாக ஆடுவாரா? என்பது சந்தேகமே.
வில்லன் கதாபாத்திரம் ஆர்.கே.சுரேஷ். இவருடைய பின்னணி இப்படித்தான் என்பதை முதல் பாதியிலேயே நமக்கு உணர்த்தி விடுகிறது. இந்த படத்தின் நிஜமான ஹீரோ இசைஞானிதான். ஆங்காங்கே வரும் பாடல்களும், பின்னணி இசையையும் விமர்சிக்க வார்த்தைகளே இல்லை. கிராமிய இசையை இசைஞானியை தவிர வேறு யாராலும் இந்த அளவுக்கு இனிமையாக தர முடியாது. ராஜா என்றுமே ராஜா தான் என்பதை மீண்டும் நிருபித்து உள்ளார். ஆனால் பாலாவினால் அது வீழலுக்கு இறைத்த நீராகி விட்டது. இந்த படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்தது ஏன் என்பது கிளைமாக்ஸ் காட்சியான கடைசி 20 நிமிடங்களே நமக்கு உணர்த்தி விடுகிறது. (ஏராளமான லாஜிக் மீறல்.) பார்ப்பவர்களுக்கு புரியும்.செழியனின் ஒளிப்பதிவு, ஜி.சசிகுமாரின் படத்தொகுப்பு ஆகியவை கச்சிதம்.முதல் பாதி வரை பரவாயில்லையே என நாம் நினைக்க, இரண்டாம் பாதியில் நம்மை தன் வழக்கமான வக்கிரம் மற்றும் குரூர காட்சிகளால் மெயின் கதையை விட்டு பாலா விலகிச் சென்றுவிடுகிறார். மொத்தத்தில் தாரை தப்பட்டை பாலா அடித்த அடியால் கிழிந்து விட்டது!