நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தெலுங்கு படம் ஒன்றில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் திரிஷா.
அது மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ஆச்சார்யா என்கிற படம். பிரமாண்டமான பட்ஜெட் படம்.
ஆனால் திரிஷா சொல்லாமல் கொள்ளாமல் அந்த படத்தை விட்டு இடையிலேயே வெளியேறியதுதான் வியப்பு.கேரக்டர் பிடிக்கவில்லை என்று சொன்னதாக ஒரு பேச்சு இருந்தது.
காஜல் அகர்வால் வந்ததால் பிடிக்காமல் வெளியேறிவிட்டார் என்பதாக அந்த நேரத்தில் ஒரு தகவல் வெளியாகியது.அதை பற்றியும் அவர் எந்த இடத்திலும் சொல்லவில்லை.
திரிஷா வெளியேறியதை பற்றி படக்குழுவினரும் எதுவும் சொல்லவில்லை.ஒரே மர்மமாக இருந்தது.
தற்போது ஆங்கில பத்திரிகைக்கு பேட்டி அளித்திருக்கும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஒரு காரணத்தை சொல்லியிருக்கிறார்.
“திரிஷா ஏன் இந்த படத்திலிருந்து வெளியேறினார் என்பது தெரியவில்லை. அவரது கேரக்டருக்காக ஆடை அணிகலன்களை எனது மகள் சுஷ்மிதா வடிவமைத்திருந்தார்.அதை திரிஷா அணிந்து கொண்டு டிரையல் பார்த்தார்.அப்படியெல்லாம் இருந்தும் வெளியேறியதுதான் புரியவில்லை.
அவர் மணிரத்னம் படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதால் ஆச்சார்யாவுக்கு போதிய கால்ஷீட் தரமுடியாது என்று நினைத்து வெளியேறிவிட்டாரோ என்னவோ?”என்பதாக சிரஞ்சீவி ஒரு கருத்து சொல்லியிருக்கிறார்.
உண்மையாக இருக்கலாம்.மணிரத்னம் படம் என்றாலே ஒரு மயக்கம் இருக்குமல்லவா! அதுவும் கல்கியின் அமரகாவியம் பொன்னியின் செல்வன். முன்னணி நட்சத்திரங்கள் மொத்தமாக நடித்திருக்கிறார்கள்.நாளைய திரை வரலாறில் பெயர் இருக்குமல்லவா! என்ன விலகுவதாக ஒரு வார்த்தை சிரஞ்சீவியிடம் சொல்லிவிட்டு வந்திருக்கலாம்.