தளபதி விஜய் படம் என்றாலே வில்லங்கம் எந்த வழியிலாவது வந்து வழி மறித்து வம்பு இழுக்கும் என்பது எழுதப்படாத விதியோ என்னவோ?அரசியல் குறுக்கீடு இருப்பதாக சொல்லப்படுகிறது.ஆனால் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
விஜய்யின் சொந்த மாமா சேவியர் பிரிட்டோ. இவரது தயாரிப்புதான் மாஸ்டர்.
பொதுவாக விஜய்,சூர்யா படம் என்றால் விநியோகஸ்தர்கள் போட்டியிட்டு உரிமையை வாங்கிவிடுவார்கள்..எப்படியும் லாபம் சம்பாதித்து விடலாம் .ஆகவே படம் தாமதமாக வந்தாலும் லாபம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் படம் மாஸ்டர் என்பதால் கதை பக்கா கமர்ஷியல் ஆக்சன் மயமாக இருக்கலாம்.
கார்த்தி நடித்திருந்த கைதி படத்தின் அபார வெற்றியினால் மாஸ்டர் மீது அதிகமாகவே நம்பிக்கை வைப்பதற்கு காரணம் இருக்கிறது.
200 கோடிக்கு அதிகமாக மாஸ்டர் விநியோக உரிமை விலை போயிருக்கிறது என்கிறது திரை உலக வட்டாரம்.ஆனால் வாங்கிய 9 விநியோகஸ்தர்களும் முழுத்தொகையையும் கட்டவில்லை என்கிறார்கள். ரிலீசுக்கு பிறகு ஒரு வாரம் கழித்துதான் மீதி தொகையை கொடுப்பார்களாம் ..
வெளிநாடுகளிலும் கொரானா கடுமை காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு இருக்கின்றன. உலகமே அமைதிக்கு திரும்பிய பிறகுதான் மாஸ்டர் ,சூரரைப்போற்று ஆகிய இரண்டு படங்களும் திரையிடப்படும்.இந்த படங்கள் மட்டுமில்லாமல் முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிற பல படங்களின் நிலையும் அதுதான் என்கிறார்கள்..
ஏப்ரல் மாதம் வெளிவந்திருக்க வேண்டிய மாஸ்டர் திரைப்படம் கொரானாவினால் பாதிக்கப்பட்டிருக்கிறது. சோசியல் டிஸ்டன்ஸ் ,ஊரடங்கு உத்திரவு காரணமாக இந்தியாவில் இருக்கிற எல்லா தியேட்டர்களும் மூடப்பட்டு விட்டன. சரக்கு கடையே சாத்தப்படட பிறகு சங்கீதம் என்ன முக்கியமா?
ஏப்ரல் மாதமும் திரை அரங்குகள் மூடப்பட்டே இருக்கும்! ஜூன் மாதம்தான் விடிவு காலம் என்கிறார்கள்.வருமானம் எதுவும் இல்லாமல் இருக்கிற மக்கள் சினிமாவுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது.
மூடப்பட்ட தியேட்டர்களை திறந்தாலும் சோசியல் டிஸ்டன்ஸ் காரணமாக டிக்கெட் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.. மாதக்கணக்கில் மூடப்பட்டதால் தியேட்டர்களில் இருக்கைகள் எந்த அளவுக்கு சேதமின்றி இருக்கும் என்பது எலி வகையறாக்களுக்கு மட்டுமே தெரியும்.கொரானா பயம் முழுமையாக அகன்ற பின்னர்தான் அரசு தனது உத்திரவுகளை தளர்த்திக்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.
மாஸ்டர் ,சூரரை போற்று ஆகிய படங்களை வாங்கிய விநியோகஸ்தர்கள் தில்லான பார்ட்டிகள்தான்.! அவர்கள் அவசரப்பட்டு கொடுத்த அட்வான்ஸை திரும்ப கேட்க மாட்டார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது என்கிறார்கள் திரை உலக புள்ளிகள்.நல்லதே நடக்கட்டும்.