நாடே கோரானவை விரட்டுவதற்கு முனைப்பாக இருக்கிற இந்த கொரனா கொள்ளை நோய் காலத்தில் அமர்க்களமான கல்யாணம் தேவைதானா?
முன்னாள் பிரதமர் தேவகவுடா.இவரது மகன் குமாரசாமி கர்நாடகாவின் முன்னாள் முதல்வர்.
இருவருமே நாட்டின் உயர்வான பதவியில் இருந்தவர்கள். பேரிடர் காலத்தில் எப்படியெல்லாம் பொதுமக்கள் நடந்து கொள்ளவேண்டும் என்று சொல்லக்கூடிய தகுதி உள்ளவர்கள்.
கல்யாணம், மற்றும் மரண நிகழ்வுகளில் மக்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை இவர்களுக்கு பிறர் சொல்லித்தரவேண்டிய அவசியமில்லை.
ஏழை மக்களுக்கு ஒரு சட்டம் ,பணம் பதவி உள்ளவர்களுக்கு ஒரு சட்டம் என இருவகை சட்டம் இந்தியாவில் இல்லை.
இந்த கடுமையான கொரானா காலத்தில் நாட்டு மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என பிரதமரில் இருந்து முதல்வர்கள் வரை எல்லோருமே விதிகளை சொல்லிவருகிறார்கள். சமூக இடைவெளி ,மாஸ்க் அணிதல் ,கூட்டம் தவிர்த்தல் ,வாகனங்களில் சுற்றல்கூடாது எனஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று பெங்களூருவில் இருக்கிற ஒரு பண்ணை வீட்டில் ஆடம்பரமாக கல்யாணம் நடந்திருக்கிறது. மணமகன் நிகில்.நடிகர். முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன்.இவருக்கும் கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவரின் பேத்தி ரேவதிக்கும் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.
மணமகன் சைடில் 60 ,மணமகள் சைடில் 30 என 90 பேர்வரை கலந்து கொண்டதாக கணக்கு சொல்கிறார்கள். எவருமே கொரானா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.ஒருவர் முகத்தில் கூட மாஸ்க் இல்லை.
நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்ட முதல்வர் எடியூரப்பாவும் மாஸ்க் அணியவில்லை என்பதுதான் சோகம்.
இப்படி இருக்கிறபோது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்.?