ஆசைகள் அத்தனையும் நனைத்த பஞ்சுப்பொதியாக கனக்க ஆசையுடன் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தான் கணவன்.
சொந்த ஊர் நெல்லூர் மாவட்டத்தில் வேங்கடகிரி.
வேலை பார்த்தது நெல்லூரில்..கவுரவமான வேலைதான். நகைக்கடையில் குமாஸ்தா.
கொரானாவுக்காக ஊரடங்கு போடப்பட்டபோது அவரால் ஊருக்கு திரும்ப முடியவில்லை. வாகன வசதி எதுவுமே இல்லை..நடந்து செல்லுமளவுக்கு வேங்கடகிரி பக்கமாகவும் இல்லை.
விதியே என்று செல்போனில்தான் உரையாடல்.!
காதல் பேச்சில் செல்போன் கரைந்து போயிருக்கும்.அந்த அளவுக்கு பிரிவின் துயரம்! பிள்ளைகளை பார்க்க முடியவில்லையே என்கிற ஏக்…க்…கம்!
செல்ல அணைப்பும் சிணுங்கலும் இல்லையென்றால் என்னய்யா இந்த மனிதப்பய வாழ்க்கை என்று அலுத்துக்கொள்ளத்தான் தோன்றும்.
அப்படிதான் நகைக்கடை குமாஸ்தாவுக்கும் இருந்திருக்கும்.?
எப்படியோ 20 நாட்களை கடத்தியவர் யாரோ ஒரு மகானுபவர் உதவியில் வேங்கடகிரி வந்து சேர்ந்தார்..
கனவுகளுடன் வீட்டு வாசல் கதவைத் தட்டினார்.
முகம் காட்டிய மனைவி ” உள்ளே வரவேண்டாம்!” என்கிறாள் .
எப்படி இருக்கும் மனிதருக்கு? “ஏன் ?”
குரலில் எக்கச் சக்க சோகம்.
“முதலில் வைரஸ் தொற்று இருக்கான்னு டெஸ்ட் பண்ணிட்டு வாங்க. நெகட்டிவ்வா இருந்தா இங்கே படுக்கை.பாசிட்டிவ்வா இருந்தா ஹாஸ்பிடல்ல படுங்க !”
புறப்பட்ட இடமான நெல்லூருக்கே மருத்துவ உதவியாளர்களுடன் போய் சேர்ந்தார்.
சோதனைகள் நடந்தன. மனிதருக்கு நெகட்டிவ் !
யுத்தத்தில் வென்ற அரசனைப்போல தற்போது வேங்கடகிரியில் இருக்கிறார்.
இந்த சம்பவம் உண்மை.ஆனால் படம் அசல் இல்லை. இணையத்தில் சுட்டது.