அருள்தாஸ்…
எஸ்.பி.ஜனநாதன்,சீனு ராமசாமி ,விஜயசேதுபதி போன்ற முற்போக்கு சிந்தனைவாதிகளுடன் இவரை பார்க்கலாம். போடுவது வில்லன் வேடமென்றாலும் பழகுவதில் சிறந்த பண்பாளர். தமிழ்ப்பற்று உள்ளவர். படத்தில் மட்டுமே நடிப்பார். வாழ்க்கையில் நடிக்கத்தெரியாதவர்.ஒளிப்பதிவாளராக இருந்து நடிகராகி தற்போது தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார்.நல்லவர்கள் துணை இருக்கிறபோது துணிந்து செயல்படுவது சாலவும் சிறந்ததல்லவா!
சரி ,மேட்டருக்கு வருவோம். இவரது முகநூலில் ஒரு நிகழ்வை பதிவிட்டிருந்தார் .படித்துப்பாருங்கள்.
“சில நாட்களாக எங்கள் வீட்டில் கேஸ் ஸ்டவ் சற்று ரிப்பேராகி இருந்தது.நேற்று வழக்கமாக ஸ்டவ் ரிப்பேர் சரி செய்யும் கடைக்கு போய் கடை போர்டிலுள்ள நம்பர்க்கு போன் செய்தேன் அந்த ஸ்டவ் மெக்கானிக் அண்ணாச்சி இன்று வருவதாக சொன்னார்.
கரெக்டாக இன்று எங்கள் வீட்டுக்கு வந்து ஸ்டவ்வை சரி செய்துகொண்டிருக்கும் போது “என்னணே தொழில் இல்லாமல் சிரமமாக இருக்கா, இல்லை இந்த மாதிரி வீடுகளுக்கு போய் சர்வீஸ் பண்றீங்களானு” கேட்டேன்…
அவர் என்னிடம்” இல்ல அண்ணாச்சி எந்த வீட்டுக்கும் போக பயமா இருக்கு” என்று சொன்னதோடு குறிப்பாக அவர் சொன்ன இன்னொரு விசயம் தான் என்னை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது.
“ஒரு வாரமா நடேசன் நகரில் ஒரு பாய் வீட்டுக்கு ஸ்டவ் ரிப்பேர் பண்ண கூப்பிடுறாங்க ஆனா போக பயமா இருக்குணே” என்று அவர் கூறியதும் நான் மிகுந்த மனவேதனைக்கு உள்ளானேன்…
நான் அவரிடம் “இல்ல அண்ணாச்சி சமையலுக்காக ஸ்டவ் சரியா எரியாம அவங்க பிள்ளை குட்டிளோடு கஷ்டப்படுவாங்க .தயவுசெய்து நீங்க போய் ரிப்பேர் பண்ணிகொடுங்க முஸ்லிம்கள் மூலமாக கொரோனா பரவியது என்ற திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகளை நம்பாதீர்கள்… “என்று கூறி “எங்கள் வீட்டுக்கு மாஸ்க் போட்டு பாதுகாப்பாக வந்த மாதிரி அவங்க வீட்டுக்கும் போங்க இந்த நேரத்தில் தான் உங்களைப்போன்றவர்களின் சேவை முக்கியம்”என்று தைரியம் சொல்லி அனுப்பி வைத்தேன்.
கண்டிப்பாக மெக்கானிக் அண்ணாச்சி அந்த இஸ்லாமிய சகோதரர் வீட்டுக்கு சென்று ஸ்டவ்வை மட்டுமல்ல அவர் காலம்தாழ்த்தி சென்றதையும் சரி செய்வார் என்று நம்புகிறேன்…
முகநூலில் கெட்ட வார்த்தைகளை பதிவு பண்ணவேண்டாமென்று நினைக்கிறேன்…
மதவெறி பிடிச்ச சல்லிப்பயலுகளா…! இதைத்தானே நீங்க எதிர்பாத்தீங்க…”என்பதாக பதிவு செய்திருந்தார்.