கொரானாவின் கொடிய பிடியில் உலகமே சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறது. அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்தாததால் பேச்சாளர்கள் எல்லாம் வருமானம் இல்லாமல் வாடிப்போய் இருக்கிறார்கள். சீரியல் பார்க்கமுடியாமல் பழைய எபிசோடுகளையே அழுதபடியே பார்த்துவரும் வீட்டரசிகள் அலுத்துப் போய் கணவருடன் சண்டை நடத்துகிறார்கள். பச்சைபோர்டு கடை மூடப்பட்டதால் மூளைக்கு வேலை இல்லாமல் குடிமகன்கள் கொதித்துப்போய் இருக்கிறார்கள்.
இந்த ரணகளத்திலும் ஒரு சுவையான மோதல் சின்னத்திரை வட்டத்தில் நடந்து கொண்டு இருக்கிறது.
சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் குஷ்பூ ஒரு அறிக்கையை பதிவு செய்திருக்கிறார். இந்த சங்கத்தின் தலைவி சுஜாதா விஜயகுமார் கருத்து என்னவென தெரியவில்லை. ஆனாலும் குஷ்பூவும், ராதிகாவும் குரல் பதிவு வழியாக கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள்.
தொலைக்காட்சி நிறுவனங்களின் நிலைப்பாடு என்னவென தெரியவில்லை.
“ அனைவருக்கும் வணக்கம்…. குஷ்பு பேசுறேன்.. சேனலிலிருந்து 5ஆம் தேதி வாக்கில் ஷூட்டிங் ஆரம்பிச்சு, மே 11 ஆம் தேதியில் இருந்து ஆன் ஏர் போகணும்னு சொல்லிட்டு இருக்காங்க… செல்வ மணி சார் கிட்ட பேசினேன் இப்பதான்.. அவர் யோசிச்சு சொல்றேன்னு சொல்லி இருக்காரு.. அதே சமயத்தில் நம்ம ஹெல்த் மினிஸ்டர் கிட்ட பேசியிருக்கேன்.. அவர் என்ன சொல்றார்னா இப்பதான் “ராபிட் டெஸ்ட் எல்லாம் ஆரம்பிக்கப் போறோம்.. இந்த டெட்ஸ்டை ராண்டம்லி பண்ணும் போது எண்ணிக்கை அதிகமாதான் இருக்கும்.. ”
”அதனால ஒரு 26, 27ஆம் தேதி வாக்கில் தான் எங்களால் சொல்ல முடியும், நீங்க எப்போது எந்த வேலை ஆரம்பிக்கலாம் என்று.
அதே சமயத்தில் பழைய மாதிரி, எல்லோரையும் கூப்பிட்டு ஷூட்டிங் பண்றது சாத்தியமே இல்லை.. யூனிட் சின்னதாய் இருக்கனும்.. தேவையான ஆட்கள் மட்டும் இருந்த போதும்.. ஸ்கிரிப்ட் ஒர்க் பண்ணும் போது முக்கியமான ஆட்கள் மட்டும் இருந்தா போதும்..
ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளை தவிர்த்துவிட்டு, அவுட் டோர் ஷூட்டிங் போகாமல் இருக்க வேண்டும். அதோடு எல்லாரும் கட்டாயமாக மாஸ்க் போட்டுதான், அத்தனை யூனிட் மெம்பர்ஸ் லொகேஷன்ல இருக்கணும்னு ரூல்ஸ் வைங்க.. ”
”முகத்தை கவர் பண்ணாம, மாஸ்க் போடாம யூனிட்டைச் சேர்ந்தவர்கள் யாராவது பாத்தீங்கன்னா, அவர்களுக்கு அபராதம் விதியுங்கள்…
ஷூட்டிங் எப்போது ஆரம்பிக்க முடியும் என்பதை 25 ஆம் தேதிக்கு மேல்தான், சுகாதாரத் துறையிடம் பேசிய பிறகுதான் சொல்ல முடியும்..
இதையேதான் செல்வமணி சாரும் சொல்லி இருக்கார். ஏனெனில் அவரும் நம்முடைய சுகாதாரத்துறை அமைச்சரிடம் பேசியிருக்கார். அவரும் இதையேதான் சொல்லி இருக்கார், நான் பேசும்போதும் இதைத்தான் சொன்னார். அதனால் 25, 26 வரைக்கும் பொருத்துக்கோங்க..
”அதே சமயம் சேனலிலிருந்து ஷூட்டிங்கை தொடங்கச் சொன்னால், தயவு செய்து சேனலிடம் என்னையும் செல்வமணி சாரையும் குறிப்பிட்டு சொல்லுங்கள், நாங்கள் சுகாதாரத்துறையிடம் பேசியிருக்கிறோம் என்று.
so when we can start என்பதை 25, 26 தேதிக்கு மேலதான் சொல்ல முடியும்.. 11 ஆம் தேதி ஒளிபரப்புவதற்கு பதிலாக ஒரு வாரம் தள்ளி வைத்தால் நன்றாக இருக்கும். தயாரிப்பாளர்கள், ஒரு நாளைக்கு ஒன்றரை எப்பிசோடு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.. எக்ஸஸ் எப்பிசோடு எடுத்து வைத்துக்கொண்டால்தான் நன்றாக இருக்கும்..
எல்லார்கிட்டையும் சொல்லிட்டேன் ஏதோ ஒரு காரணம் சொல்லிட்டே இருக்கீங்க.. ”
”சரியான நேரத்திற்கு ஷூட்டிங்கை ஆரம்பியுங்கள்.. காலை 7.30 மணிக்கு எப்படியாவது ஷூட்டிங்கை ஆரம்பியுங்கள். இரவு 9 மணி வரை நடத்துங்கள்..இனிமேல் நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஒவ்வொரு நிமிடமும் பணம்.. எல்லோருக்கும் இப்போ புரிஞ்சிருக்கும், எப்படி கஷ்டத்தில் இருக்கும் என்பது .. எல்லாருமே கொஞ்சம் பட்ஜெட் பார்த்து வொர்க் பண்ணுங்க.. எல்லோர்க்கும் நன்றி.. எல்லாரும் பாதுகாப்பாக இருங்கள்.. வீட்டிலேயே இருங்கள்.. ”என குஷ்பு பதிவு செய்திருக்கிறார்.
இதற்கு சின்னத்திரை தயாரிப்பாளர்கள்கள் சங்க முன்னாள் தலைவி ராதிகா சரத்குமார் ஒரு அறிக்கையை பதிவு செய்திருக்கிறார்.
கிட்டத்தட்ட குஷ்பூவுக்கு மறுப்புத்தெரிவிக்கிற வகையிலேயே அமைந்திருக்கிறது.குஷ்பூ யாரையும் கலந்து பேசாமலேயே தன்னிச்சையாக அறிக்கை விட்டது போன்ற ஒரு தொனியை ராதிகாவின் அறிக்கை ஏற்படுத்துகிறது.
, “ நான் ராதிகா சரத்குமார் பேசுறேன். நான் இப்போது தான் சேனல், அமைச்சர்கள் மற்றும் சில தயாரிப்பாளர்களிடமும் பேசியுள்ளேன்.
குஷ்பு தெரிவித்த கருத்துக்களையும் கேட்டேன். ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும்.
சேனல், ஷூட்டிங்கை தொடங்க வேண்டும் என்று சொல்லவில்லை.. ஷூட்டிங்கை தொடங்க தயாராக இருங்கள், ஸ்கிரிப்ட் எல்லாம் தயாராக வைத்துக்கொள்ளுங்கள் என்றுதான் சொல்லியுள்ளது. நான் அதை மீண்டும் உறுதி செய்து கொண்டேன்.
சூட்டிங் போகனும்னு சொல்றது அரசாங்கம் தான். நாம் இன்னும் ரெட் சோனில் உள்ளோம். சென்னையை பொறுத்தவரை, குறிப்பாக கோடம்பக்கம் இன்னும் ஹாட்ஸ்பாட்டில் தான் உள்ளது.
ஆள் நடமாட்டமே அங்கு இருக்கக்கூடாது என்கிற நிலை இருக்கிறது. அதனால் இப்போது ஷூட்டிங் தொடங்குவது பற்றி யோசிக்க முடியாது.
இதெல்லாம் மாறட்டும், அதன்பிறகு எப்படி ஷூட்டிங் தொடங்குவது என குஷ்பு ஆலோசனை சொல்லியுள்ளார். அனைத்து தயாரிப்பாளர்களுடன் கலந்தாலோசித்து எப்படி செயல்படுவது என செல்வமணியிடம் தெரிவித்துள்ளோம்.
நாம் ஒரு தருணத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். அதற்கு தகுந்த மாதிரி தான் வேலை செய்ய முடியும்.. அது மனசுல வச்சிக்கிட்டு நாம செயல்படுவோம் என்று சொல்லி இருக்கேன்.. இத மனசில வச்சிகிட்டு எப்படி பிளான் பண்ணி எப்படி ஒர்க் பண்ணனும்னு பார்க்கிறோம்.
ரொம்ப முக்கியமா சேனல் ஷூட்டிங் தொடங்கனும்னு சொல்லல, அவங்க தயாராக இருங்கன்னு தான் சொல்லியிருக்காங்க.” என்று ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.