புரட்டிக்கொண்டிருந்தேன்.பழைய பதிவுகளை!
நான் கவியரசர் கண்ணதாசனின் அடிமை.பள்ளி வாழ்க்கையிலேயே அவரது இலக்கியக் கூட்டம் எந்த கல்லூரியில் நடந்தாலும் ஓடிவிடுவேன்.
‘கண்ணதாசன் கவிதைகள்’ புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தேன்.
முத்தொள்ளாயிரம் பாடலொன்றுக்கு எழுதி இருந்த அவரது விளக்க உரை மயக்கியது. மது அருந்தாமலேயே கிறங்கிவிட்டேன். என்னைப் போல தனியனாக தவிக்கும் எத்தனையோ பேர்கள் மது அருந்துவதற்கு இதுவும் ஒரு காரணமோ?
துணையை இழந்த ஒற்றையர்களுக்கு கவிதைதானே தேசிய கீதம்.
“கையகம் தொட்டும் மெய்யகம் தொட்டும்
கட்டிப் பிடித்துக் கையோடு கையை
இட்டுப் பிணைத்தும் ஈந்தனன் முத்தம்!
முத்தம் கொண்டதால் மூண்டது காமம்!
கட்டுக்காளை கன்னியின் உடலைத்
தொட்டாற் காமம் தோன்றா தாசொல்?”
ரஜனீஸ் முரட்டுப் பெரியாராக தெரிந்தார். ஓஷோவின் தத்துவங்கள் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் மனிதனின் மனம் சார்ந்தே பேசும் என்பது எனக்கு இன்றுதான் புரிகிறது. நேற்றுவரை அவரை செக்ஸ் சாமியாராகவே நினைத்திருந்தேன்.
அவர் சொல்வார்: “காதலர்களுக்கான யோகா என்பது எளிதான முறைதான்! முழுமையான உடலுறவின் புனிதத் தன்மையை அனுபவிக்க வேண்டும். எல்லா மதங்களும் செக்சை ஒரு பாவச்செயலாகவே சித்தரித்து உடலுறவின் புனிதத் தன்மையை அழித்து விட்டன” என்கிறார் .
நீங்கள் காமம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? துறவிகளும் இல்லறம் சார்ந்துதானே வாழ்ந்திருக்கிறார்கள்.
காமம் என்பது தவம் இருந்து பெறுகிற வரம் இல்லை.
கவசக் குண்டலம் கர்ணனுக்கு எப்படியோ, அப்படித்தான் மனிதனுக்கு காமமும்!
காமம் உடலுடன் சேர்ந்தே பிறந்து வளர்கிறது.
மனிதனுக்கு சாதியை ஓட்ட வைத்தவர்களால் காமத்துக்கு சாதி, மதத்தை ஒட்ட முடியவில்லை.
காமம் எனக்கும் இருக்கிறது.என் வீட்டு எலிக்கும் இருக்கிறது.
ஆனால் ராணி தேனீக்கு உடலுறவு என்பது அதன் வாழ்வில் ஒரே ஒரு முறைதான்! பரிதாபமாக இல்லையா!
பரிதாபம்தான்! உடலுறவு கொண்டதும் உறுப்பு ஒடிந்து ராணீ தேனீயின் உடம்பில் தங்கி விடுகிறது. ஆண் ஈ மடிந்து போகிறது. இத்தகைய வாழ்க்கை மனிதனுக்கு அமைந்திருந்தால்?
நினைத்துப் பார்க்கவே ……!