மாமன்னன் ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சை கோவிலை மையமாக வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் சிலர் மத விரோத கருத்துகளை விதைத்திருக்கிறார்கள்.
நடிகை ஜோதிகா பேசாததை ,பேசியதாக வலிந்து புனைந்து பொய்யினை பரப்பியிருக்கிறார்கள்.
பெண்கள் தொடர்பான பத்திரிகையின் விருது வழங்கும் விழாவில் ஜோதிகாசூர்யா பேசியதென்ன?அவர் நடித்து வரும் படத்தின் ஷூட்டிங்கிற்காக தஞ்சாவூர் சென்றிருந்தபோது அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி பேசி இருக்கிறார்.
வீடியோவைப் பார்த்தால் தெளிவாகத் தெரியும்!
“தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலைப் பார்க்காம போயிராதீங்க ,அவ்வளவு அழகாக இருக்கும்.போய்ப் பாருங்கன்னு சொன்னாங்க.
நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். ரொம்ப சிம்பிளா ,கியூட்டா ,உதய்ப்பூர் பாலஸ் மாதிரி இருக்கும்.
மறுநாள் அரசு மருத்துவமனையில் ஷூட்டிங்.அங்க நான் பார்த்ததை வாயால் சொல்ல முடியாது.அவ்வளவு மோசமான பராமரிப்பு. அந்த மருத்துவமனையைப் பார்த்துவிட்டு நான் கோவிலுக்கு செல்லவில்லை.
கோவிலை பராமரிக்க,பெயிண்ட் அடிக்க லட்சக் கணக்கில் செலவு செய்றாங்க.உண்டியல் பணத்தை அரசு பள்ளிக்கும் ஆஸ்பத்திரிக்கும் பராமரிப்பதற்கும் கொடுங்க.”இதுதான் அன்று ஜோதிகா பேசியது.
இந்த பேச்சில் எங்கே தஞ்சை ஆலயத்தை குறை கூறியிருந்தார் ?
குற்றம் சொல்லி ஏசியவர்களுக்கு ஒரு சிறு விண்ணப்பம்.
இது சித்திரை மாதம். நான்மாடக்கூடல் பெருநகராம் மாமதுரையில் சித்திரைத் திருவிழா கொடி கட்டி கொண்டாடப்பட வேண்டிய மாதம்.
மதுரை மேல ஆவணி மூல வீதியில் அன்னக்குழி மண்டபம் என மன்னர் காலத்தது ஒன்று இருந்தது. மீனாட்சி திருக்கல்யாணத்துக்கு வந்த தேவர்களுக்கு,மக்களுக்கு சமையல் நடந்த இடமென்பர்.ஆலயத்துக்கு சொந்தமான இந்த இடத்தில் பள்ளிக்கூடம் நடந்து வந்தது.அந்த பள்ளியை அகற்றி விட்டு தற்போது இருப்பது என்ன?புராணத்தில் சொல்லப்பட் ட அந்த இடம் தற்போது இருக்கிறதா?
பிர்லாவின் பெயராலே தங்குமிடம் கட்டப்பட்டிருக்கிறது. புராணத்தில் சொல்லப்பட்ட அன்னக்குழி மண்டபத்தை எந்த குண்டோதரன் விழுங்கினான் ?எவர் கவலைப்பட்டார்.
ஜோதிகா சொல்லாததை வைத்துக் கொண்டு சண்டைக்கு வித்திடுபவர்கள் இதற்கு என்ன பதில் சொல்வார்கள்?
மாமன்னன் ராஜராஜசோழனை இழித்து சொல்லிவிட்டார் என்பதாக பொய் கூறுகிறவர்களுக்கு ஒரு கேள்வி.
அந்த மாமன்னன் சமாதி என அடையாளம் காட்டப்பட்ட அந்த இடம் எப்படி இருக்கிறது?பொங்கியவர்கள் பதில் கூற கடமைப் பட்டிருக்கிறார்கள். சாய்ந்த நிலையில் சிவலிங்கம் இருக்கிற இடம்தான் சமாதி என சொல்லி வழிபட்டு வருகிறார்கள்.ஆய்வுகள் நடத்தப்பட்டனவா ?முடிவு என்ன?
மத்திய மாநில அரசுகள் அந்த மாமன்னன் சமாதிக்காக என்ன செய்தன?முகவை மாவட்டத்தை சேர்ந்த வழக்குரைஞர் திருமுருகன் போட்ட வழக்கின் நிலை என்ன?
இனி பிரச்னைக்கு வருவோம் .ஜோதிகா நடித்துவருகிற படத்தை இயக்கி வரும் இரா. சரவணன் சொல்வதை கேளுங்கள்.
“சசிகுமார் – ஜோதிகா நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறேன்.
அந்தப் படத்துக்கான படப்பிடிப்பின் போதுதான் தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு வந்தார் ஜோதிகா.
தஞ்சை மக்களின் வாழ்க்கை குறித்த கதை என்பதால் எதையுமே செட் போடாமல் லைவ்வாக எடுக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தேன்.
அதனால் ராஜா மிராசுதார் மருத்துவமனையில் முறையான அனுமதி பெற்று நோயாளிகள் இல்லாத பகுதியாகப் பார்த்து ஷூட் செய்தோம்.
ஜோதிகா வந்தார். மருத்துவமனையின் மற்ற பகுதிகளையும் போய்ப் பார்த்தார். பிறந்த குழந்தையைக்கூட உரிய இடம் ஒதுக்கிக் கவனிக்க முடியாமல் மக்கள் படும் சிரமங்களை வருத்தமுடன் நோக்கினார்.
பிறந்த வடு மாறாத குழந்தையோடு ஒரு தாய் ஒடுங்கிப் போய் உட்கார்ந்து இருந்ததைக் கண்டு கலங்கினார்.
வரலாற்று அடையாளமாக உலகு சிறக்க உயர்ந்து நிற்கும் தஞ்சை பெரிய கோயிலுக்கு எதிர்த்தாற்போல் இப்படியொரு அடிப்படை வசதிகள்கூட இல்லாத மருத்துவமனையா என்பதுதான் அவருடைய வியப்பாகவும் வேதனையாகவும் இருந்தது.
அதனால்தான் கோயிலுக்கு நிகராக மருத்துவமனைகளும் இருக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.
ஆயிரம் அன்ன சத்திரங்கள், பதினாயிரம் ஆலயங்கள் கட்டுவதைவிட ஒரு ஏழைக்குக் கல்வி கற்பிப்பது புண்ணியமானது எனச் சொன்ன மகாகவி பாரதியின் பெண்ணுருவாய் நின்றுதானே ஜோதிகா பேசி இருக்கிறார்.
இதில் எங்கே வந்தது பிழை?
கோயிலுக்கு நிகராக மருத்துவமனைகள் எனச் சொல்வது எப்படி கோயிலுக்கு எதிரானதாக அமையும்?
சில வருடங்களுக்கு முன்னர் ‘கோயில் கட்டுவதை விட கழிவறைகள் கட்டுவதுதான் முக்கியம்’ எனப் பேசினார் நம் பிரதமர் மோடி. அதற்காக அவர் கோயில்களை அவமானப்படுத்தி விட்டார் எனச் சொல்ல முடியுமா?
ஜோதிகாவுக்கு பெரிய கோயில் எவ்வளவு விருப்பமானது என்பதும் அவர் அந்தக் கோயிலை எந்தளவுக்கு மதிப்பார் என்பதும் எங்கள் யூனிட்டுக்கே நன்றாகத் தெரியும். தன் பிள்ளைகளுக்கு பெரிய கோயிலின் நினைவுச் சின்னங்களை அன்புப் பரிசாக வாங்கிச் சென்றவர் அவர். இந்தப் பரபரப்புப் பின்னணியில் என் பங்கும் இருப்பதால் தான் இந்த விளக்கம்.
அரசு மருத்துவமனை பக்கம் வந்தால் நோய்த்தொற்று வந்துவிடும் என்றெண்ணி அதை செட் போட்டு எடுத்துவிட்டுப் போயிருக்கலாம்.
“எங்கள் மக்களுக்காகத்தான் படம். எங்கள் மக்களைப் பாருங்கள். அவர்களின் சூழலில் வாழுங்கள” எனச் சொல்லிச் சொல்லிப் படம் எடுக்கிறேன்.
விவசாய மக்களோடு உச்சி வெயிலில் களை கொத்த வயற்காட்டில் இறங்கச் சொன்னேன். ஒரு வார்த்தை மறுப்பு சொல்லாமல் வயலில் இறங்கிக் களை கொத்தினார் ஜோதிகா. கால்கள் சுட்டுப் பொசுக்க காட்டிக் கொள்ளாமலே சமாளித்தார்.
ஆரத்தி சுற்றிய பெண்களோடு அளவளாவினார். பனை மட்டையில் கூழ்க் குடிக்கும் பக்குவம் கற்றார். ஒப்பாரிப் பெண்கள் மத்தியில் உட்கார்ந்து அழுதார். தூண்டில் வீரன் கோயிலில் மாவிளக்குப் போட்டுக் கும்பிட்டார். நடுக்குளத்தில் இறங்கி கோரை அறுத்தார். தஞ்சை மக்களின் வாழ்வியலை அறிய, அப்படியே வாழ அவர் கற்றுக் கொண்டார். தஞ்சைக்கே உரிய வாஞ்சை கலந்த வார்த்தைகளைப் பேசக் கற்றார். இந்த சிரமங்களை எல்லாம் படாமலே அவர் இந்தப் படத்தில் நல்லபடி நடித்திருக்க முடியும்.
“சரவணன் சார், தஞ்சாவூர் மக்களை எனக்கு அவ்வளவு பிடிக்குது. ரொம்பப் பாசமா இருக்காங்க சார்…” எனச் சிலிர்த்த அவருடைய நல் மனதுதான் மருத்துவமனைகளையும், பள்ளிக் கூடங்களையும் பற்றி அவரைப் பேச வைத்தது. இந்தப் பேரன்புக்கு இவ்வளவு பின்னணிகள் கற்பிப்பது நியாயமில்லை! அதிலும் குறிப்பாக இந்தக் கொரோனா நேரத்தில் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் இக்கட்டான சூழலில் இத்தகைய சர்ச்சைகளைக் கிளப்புவது கொஞ்சமும் மனசாட்சியற்றது.”என்கிறார் இயக்குநர் இரா.சரவணன்.