திரை உலகமே இன்று ஐ.சி.யூ.வில்தான் படுத்துக் கிடக்கிறது.
கொரானா மனிதர்களை மட்டுமல்ல மிகப்பெரிய தொழில் துறையையே தூக்கி வாயில் போட்டுக் கொள்ளப்பார்க்கிறது. கோர நகங்களின் பிடியில் சிக்கி இருக்கிறது..எப்போது கிழித்து எறியும் என்பது தெரியவில்லை.
தயாரிப்பாளர்கள் ,நடிகர்கள்,தொழில் நுட்ப வல்லுநர்கள் ,தொழிலாளர்கள் என சகல தரப்பினரும் மூச்சு மூட்டித் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
கொரானா அச்சம் அறவே தொலைந்து போய் திரை உலகம் மறு பிறவி எடுக்கும் என்கிற நம்பிக்கை சற்று இருக்கிறது..நம்பிக்கைதானே வாழ்க்கை.!
சினிமா தங்களை வாழ வைக்கும் என்கிற நம்பிக்கையில் கேரளத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு முக்கிய நடவடிக்கை எடுத்திருக்கிறது.
நடிகர்களின் சம்பளத்தை பாதியாக குறைத்துக் கொள்ளவேண்டும் என்பது அந்த நடவடிக்கை
பைனான்ஸ் வாங்கி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தயாரிப்பாளர்கள் வட்டி கட்ட முடியாத நிலை ஏற்பட் டுள்ளது.
இது குறித்து மலையாள சினிமாவின் முன்னணி படத் தயாரிப்பாளர் சுரேஷ் குமார் கூறுகையில்,, ‘இயல்பு நிலை எப்போது திரும்பும் என்பது தெரியவில்லை. லாக்டவுன் முடிந்து சினிமா உலகம் மீள வேண்டும் என்றால், நடிகர்களும், டெக்னீஷியன்களும் அவர்களது சம்பளத்தில் 50 சதவிகிதத்தைக் குறைக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
. கேரள சினிமாவில் முன்னணி நடிகர்களாக, மம்மூட்டி, மோகன்லால் உள்ளனர்.இந்நிலையில் கேரளவைத் தொடர்ந்து தமிழ் திரைப்படத் தயாரிப்பளர்களும் இதே கோரிக்கையை கோலிவுட் நடிகர்,நடிகைகள் மத்தியில் எழுப்ப திட்டமிட்டு வருகின்றனர் .