நினைவுகள் எனக்கு அழையா விருந்தாளி மாதிரி…
எப்போது வரும் என்பது எனக்குத் தெரியாது.
நேற்று இரவு படுத்திருந்தபோது மனக்கதவை திறந்து கொண்டு ஒரு உருவம் எட்டிப்பார்த்தது.
பெண்ணாக இருந்திருந்தால் பெரிதும் விரும்பியிருப்பேன். அவர்களுடன் பேசுவதில் தனிச்சுகம் உண்டு. மென்மையான குரல் ஆண்களுக்குப் பிடிக்கும்.இப்படியெல்லாம் சொல்வதால் பெண் பித்தன் என்று எண்ணிவிட வேண்டாம்.சோதரிகளுடன் பேசுவதில்லையா!ஆனால் எட்டிப்பார்த்தது ஆண் .பிரபல நடிகர்.
“மெஜஸ்டிக் ஸ்டுடியோ நினைவுக்கு வரவில்லையாண்ணே ?”
எழுந்து உட்கார்ந்தேன். ராதாரவி பக்கத்தில் அமர்ந்திருப்பதைப் போன்ற உணர்வு.
சட்டென நினைவுகளில் கலந்து விட்டேன்.
ஆர்க்காடு சாலையில் மெஜஸ்டிக் ஸ்டுடியோ. அடர்ந்த மரங்கள் .நிழல் விழும் இடமாக பார்த்து மடக்கு சேர்கள். சிலவற்றில் டர்க்கி டவல்கள் போர்த்தப்பட்டிருந்தன. அவைகள் நடிக நடிகையர்க்கான ஆசனங்கள். பிறர் யாரும் அமர்ந்து விடக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
குகைக்குள் போவது போன்ற வடிவமைப்பில் செட் போட்டிருந்தார்கள்.
அன்றைய படப்பிடிப்பு வீர பாண்டியன் என்கிற படத்துக்காக.!
கார்த்திக் ரகுநாத் இயக்குநர் .
தயாரிப்பாளர் ‘பசி’ துரை .
படத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ,கேப்டன் விஜயகாந்த் ,ஜெய்சங்கர், ராதிகா ,வி.கே.ராமசாமி .ராதாரவி ,பாலிவுட் நடிகர் ரஞ்ஜீத் ,சுமித்ரா ஆகியோர் நடித்திருக்கிறார்கள் .ஆனாலும் அன்றைய படப்பிடிப்பிற்கு ராதா ரவியும் ரஞ்ஜீத்த்தும் வந்திருந்தார்கள் .நிறைய ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள்.
பசி துரை படம் என்றால் சுமித்ராவும் இருப்பார் என்பது ராசி கணக்கு.அந்த காலத்தில் இத்தைகைய நம்பிக்கைகள் அதிகம் இருந்தன. ‘ப் ‘போடாமல் ஸ்ரீதர் கல்யாண பரிசு எடுத்தார் அல்லவா!
செட் கல கல வென இருந்தது. நடிகர்களும் ஜாலியாக பேசிக்கொள்ளுவார்கள். பத்திரிகையாளர்கள் இருக்கிறார்களே என பம்முவது கிடையாது. அவர்களது நட்பு குடும்ப அளவிலாக இருந்தது.
ஒரு சம்பவத்தை சொல்லுகிறேன்.
விஜயகாந்தும் ஜெய்சங்கரும் மர நிழலில் சீட்டு ஆடிக்கொண்டிருந்தார்கள். செட்டுக்குள் இயக்குநர் கார்த்திக் ரகுநாத் வேறு சிலரை வைத்து சில காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தார்.
சீட்டு விளையாடும் இடத்தில் தினகரன் பத்திரிகையாளர் கண்ணதாசனும் இருந்தார். பேச்சு சுவாரசியமாக போகிறது.
கேப்டனை டா போட்டுத்தான் ஜெய் சங்கர் பேசுவார். மதுரை ஸ்லாங்கில் அண்ணேம்பார் விஜயகாந்த்.
விளையாட்டு வேகத்தில் பேச்சு எங்கெல்லாமோ போகிறது.!
காதலை பற்றி பேசினார்கள் .அன்றைய அரசியலை அலசினார்கள். விஜயகாந்தின் அரசியல் எதிர்காலம் பற்றி பேசினார்கள். அன்றைய கால கட்டத்தில் கேப்டனுக்கு அரசியல் ஆசை கொஞ்சம் கூட இல்லை என்றாலும் பேசப்பட்டது.
எல்லாமே அவர்கள் இருவர் தொடர்புடைய,தனிப்பட்டவை என்பதால் செய்தி என்கிற கண்ணோட்டத்தில் பார்க்கப்படவில்லை. பத்திரிகையாளர்களை நண்பர்களாக பார்த்ததால்தான் அன்று அவர்களால் அப்படி பேச முடிந்தது.
வடஇந்திய நடிகர் ரஞ்ஜீத் அன்றைய பாலிவுட் படங்களில் பக்கா வில்லன். அவரை வீர பாண்டியன் படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடிப்பதற்கு துரை ஒப்பந்தம் செய்திருந்தார்.
ராதாரவியும் ரஞ்ஜீத்தும் நல்ல நண்பர்கள் .
“மிஸ்டர் ரவி. எனக்கு உங்களின் மொழி தெரியாது. எவராவது திட்டினால் கூட புரிந்து கொள்ள முடியாது. பொதுவாக மொழிதெரியாதவனை சீண்டுவதற்காக கெட்ட வார்த்தைகளை சொல்லி சாதாரணமாக பேசுவது மாதிரி பேசிவிட்டு பிறகு தனியாக போய் மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டு ரசிப்பார்கள். அதனால் கெட்டவார்த்தைகளை எனக்கு சொல்லிக் கொடுத்து விடுங்கள் .நான் தெரிந்து வைத்துக் கொள்கிறேன் “என கேட்டு வாங்கி வைத்துக் கொண்டுதான் வீர பாண்டியன் செட்டுக்குள் நடிக்க வந்திருக்கிறார் ரஞ்ஜீத்.
ஆனால் வி.கே.ராமசாமி இருக்கிறாரே ..கொஞ்சம் தெரிந்திருந்தாலும் போதும் .மனிதர் அட்டகாசமாக சிரித்துக்கொண்டே எதிராளியிடம் எல்லா விஷயங்களையும் கறந்து விடுவார்.
இவரிடம் ரஞ்ஜீத் மாட்டிக்கொண்டு பட்ட அவஸ்தையை மொத்த யூனிட்டும் ரசித்துப்பார்த்து சிரித்தது.
—தேவிமணி