பொன்மகள் வந்தாள் படத்தை ஓ டி டி தளத்தில் வெளியிடக்கூடாது ,அப்படி வெளியிட்டால் சூர்யாவின் படங்களை தியேட்டர்களில் வெளியிடமாட்டோம் என தியேட்டர் அதிபர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள் .
பொதுவாக தியேட்டர் அதிபர்கள் மீது தயாரிப்பாளர்களுக்கு அதிருப்தி இருக்கிறது. தங்களுடைய படங்களுக்கு சரியான நேரம் ஒதுக்குவதில்லை ,காலை காட்சியை ஒதுக்கி தங்களின் படங்களை ஓடவிடாமல் செய்து விடுகிறார்கள்.பார்க்கிங் கட்டணம் அதிகம் ,தின்பண்டங்கள் விலை மும்மடங்கு அதிகம் என்றெல்லாம் பல வித குற்றச்சாட்டுகளை கூறி வந்தார்கள். சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்காரர்கள் இடம் கொடுப்பதில்லை என்கிற குறை வெகுகாலமாகவே இருக்கிறது.
இந்த நிலையில்தான் கொரானா வந்து மாதக்கணக்கில் தியேட்டர்களை மூட வைத்திருக்கிறது. இந்திய அளவில் மட்டுமல்ல ,உலக அளவில் தியேட்டர்கள் மூடிக் கிடக்கின்றன,இன்னும் எத்தனை மாதங்களுக்கு இந்த மூடல் இருக்கும் என்பது கொரானாவின் நடமாட்டத்தைப் பொருத்துதான் அரசு அறிவிக்கும்.
அதுவரை கடன் வாங்கி படம் எடுத்துவிட்டு திரையிடக் காத்திருக்கும் தயாரிப்பாளர்கள் வட்டியை கட்டிக் கொண்டிருப்பார்களா?
பொன்மகளுக்கு முன்னதாகவே ஓடிடி தளங்களில் படங்கள் பல வெளியாகி இருக்கின்றன.
இயக்குநர் வெங்கட்பிரபுவின் ஆர்.கே.நகர் ,பிரகாஷ்ராஜ் நடித்த சில சமயங்களில் ,மற்றும் சிகை ,இக்ளூ போன்ற படங்கள் வெளியாகி இருக்கின்றன.அப்போதெல்லாம் தியேட்டர்காரர்கள் எந்த விதமான எதிர்ப்பும் காட்டாமல் சூர்யாவின் படத்துக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பதேன்? இப்படி எதிர்ப்பு தெரிவிப்பதால் அடுத்து வெளிவரவிருக்கிற சூரரைப் போற்று என்கிற படமும் ஓடிடி தளத்துக்குப் போனால் என்ன செய்ய முடியும்? மற்ற தயாரிப்பாளர்களும் தயாராகவே இருக்கிறார்கள்.