மதுரையில் அயிரைமீன் குழம்புக்கு அடுத்து விரால் மீன் குழம்பு தான் ஸ்பெஷல் அயிட்டம். இதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க…
மதுரை ஸ்பெஷல் விரால் மீன் குழம்பு;
தேவையான பொருட்கள்: விரால் மீன் – 10 துண்டுகள். புளி – 1 எலுமிச்சம்பழம் அளவு ,மஞ்சள் தூள் – 1 சிட்டிகை கொத்தமல்லி – சிறிது, உப்பு – தேவையான அளவு, அரைத்த தேங்காய். – 1/4 கப், சோம்பு – 1 டீஸ்பூன், மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், மல்லி தூள் – 2 டீஸ்பூன்( வதக்கி அரைப்பதற்கு) நல்லெண்ணை – 1 டீஸ்பூன் தக்காளி – 1 (நறுக்கியது) பெரிய வெங்காயம் – 1/2 (நறுக்கியது) சின்ன வெங்காயம் – 6 தாளிப்பதற்கு… வெந்தயம் – 1 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் சின்ன வெங்காயம் – 10 பூண்டு – 5 பல் தக்காளி – 1 (நறுக்கியது) கறிவேப்பிலை – சிறிது. எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: முதலில் விரால் மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவி,தண்ணீர் இல்லாமல் வடித்துவிட்டு, அதில் மஞ்சள் தூள் கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு மண்சட்டியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வதக்கி அரைத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி பின்னர் இறக்கி ஆற வைக்க வேண்டும். பின்னர் மிக்ஸியில் அரைப்பதற்கு எடுத்துக்கொண்ட பொருட்களை போட்டு, அத்துடன் வதக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி துவையல் பதத்திற்கு செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஓரளவு சுடு நீரில் புளியை அரை மணிநேரம் நன்றாக ஊற வைத்து,அதிலிருந்து கால் 1/4 கப் சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்பு மண்சட்டியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, பின் அதில் கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்னர் அதில் தக்காளியைப் போட்டு, பச்சை வாசனை போக நன்கு வதக்கிய பின்னர், ஏற்கனவே அரைத்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி கலவையை , மஞ்சள் தூள் சேர்த்து, 1/4 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து சுமார் 20 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, பின் தனியே எடுத்து வைத்துள்ள புளிச்சாறு சேர்த்து கொதிக்க விட வேண்டும். குழம்பு நன்றாக கொதி நிலைக்கு வந்ததும்,தயாராக வைத்துள்ள விரால் மீன் துண்டுகளை போட்டு, நன்கு வேகும் வரை கொதிக்க விட்டு இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவி 1 மணிநேரம் கழித்து பரிமாறினால், மதுரை ஸ்பெஷல் விரால் மீன் குழம்பு ரெடி!