ரஜினிமுருகன் படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து மீண்டும் ஒரு படம் தயாரிக்கும் முடிவிற்கு வந்திருக்கிறாராம் இயக்குநர் லிங்குசாமி. கமல் நடிப்பில் வெளியான உத்தமவில்லன் லிங்குசாமிக்கு மிகப்பெரிய தோல்வியைகொடுத்தது. சூர்யாவின் அஞ்சான், கமலின் உத்தமவில்லன் படங்களின் அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அதல பாதாளத்தில் வீழ்ந்தது. இதன் காரணமாக தனது தயாரிப்பில் உருவான ரஜினி முருகன் படத்தை பலமுறை போராடி பொங்கலுக்கு தான் மும்பை நிறுவனத்தின் உதவியுடன் வெளியிட்டார். இதற்கிடையே லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த ‘உத்தமவில்லன் நஷ்டத்தை ஈடுகட்ட லிங்குசாமிக்கு இன்னொரு படம் நடித்து கொடுப்பதாக கமல் வாக்குறுதி அளித்திருந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியாகிய நிலையில், தற்போது கமலுக்காக, இயக்குநர் லிங்குசாமி இரவு,பகலாக கண்விழித்து ஒரு கதையை தயார் செய்து வைத்துள்ளாராம். அந்த கதையில் கமல் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர். இந்த படத்தை லிங்குசாமியே இயக்கப்போவதாகவும், இதில் கமல் பல்வேறு கெட்டப்புகளில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை இயக்குவதோடு லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவும் முடிவு செய்துள்ளாராம். இவருடன் பென் மூவிஸ் என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்கப்போவதாக கூறப்படுகிறது.ஸ்ருதிஹாசனுடன் இணைந்து கமல் நடிக்கும் படத்தை முடித்தவுடன் லிங்குசாமி படத்தில் அவர் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.கமல்-லிங்குசாமி இணையவுள்ள இந்த படம் ரன், சண்டக்கோழி போல அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்றும் இந்த படத்தில் கமல் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் லிங்குசாமி தரப்பில் இருந்து கூறப்படுகிறது.