எனது 75 வது பிறந்த நாள்.
காலையில் மனைவி மக்களுடன் குரோம்பேட்டை அருகில் இருக்கிற பொழிச்சலூர் அகஸ்தீஸ்வரர் கோவிலுக்குச் சென்று வழிபட்டோம். என் மனைவி மக்களுடன் ஒன்றாக சென்ற ஒரே நிகழ்வு அது ஒன்றுதான்.
வீட்டுக்குத் திரும்பியபோது ‘தல’அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தொலைபேசியில் அழைத்தார்.
“அண்ணே பிறந்த நாள் வாழ்த்துகள் .இப்ப எங்கேருக்கீங்க?”
அவருக்கு என்ன சந்தேகமோ…”வேறெங்கே போவேன் தம்பி. வீட்லதான் இருக்கேன்.!”
“வேற எதுவும் வேலையா வெளியே எதுவும் போக வேண்டியதிருக்கா?”
என்ன திடீர்னு இப்படியெல்லாம் கேட்கிறார். ஒருவேளை நமக்காக பார்ட்டி எதுவும் அரேஞ்ச் பண்ணுவாரோ? அட ..அந்த சனியனைத்தான் தொடறதில்லையே! வேற எதுக்காக இருக்கும்? நமக்காக பரிசு எதோ வாங்கி வச்சிருப்பார் போல. சரி என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு “நான் எங்கேயும் போகல தம்பி.!வீட்டில்தான் இருக்கேன்”என்று சொன்னேன்.
“அங்கேயே இருங்க ! நாசர் வருவார்” என்று சொல்லிவிட்டு செல்போன் இணைப்பைத் துண்டித்து விட்டார்.
அந்த காலத்தில் பிறந்த நாள் பரிசாக கேக்,சாக்லேட் டப்பா அனுப்பி வைப்பது வழக்கம்.
பட்டுச் சட்டையை கழற்றியபோது வாசலில் கார் வந்து நின்றது.
“அண்ணே ,போகலாமா,”என்றபடியே சுரேஷ் சந்திராவின் வலது கை நாசர் காரை விட்டு இறங்கி வந்து விட்டார். ‘மாலைமுரசு’வில் பணியாற்றிய காலத்தில் இருந்தே நாசர் எனக்கு பழக்கம்.
“எங்கே தம்பி? ஒண்ணுமே சொல்லமாட்டீங்கிறீங்களே?”
“எனக்கும் தெரியாதுண்ணே …சுரேஷ் சார் அண்ணனை கூட்டிட்டுவாங்கன்னார் .வாங்க போகலாம் ” என்றார் .
கார் கிளம்பியது.
போக் சாலையில் இருந்த சுரேஷ் சந்திராவும் காரில் ஏறிக் கொள்ள அங்கிருந்து கிளம்பிய கார் ‘தல’ அஜித்குமார் வீட்டுக்குள் போய்த்தான் நின்றது.
அதுவரை வேறு விஷயங்களை பேசிக்கொண்டுவந்த சந்திரா அப்போதுதான் “சார்தான் உங்களை கூட்டிட்டு வரச்சொன்னார்ணே “என்று சொல்லிவிட்டு சிரித்தார். முன்னதாகவே வாங்கி வைத்திருந்த கேக் கும் வீட்டுக்குள் போனது.
வாய் நிறைய வாஞ்சையுடன் “வாங்கண்ணே “என்று தல என்னை அணைத்துக் கொள்கிறார்.
மீடியா நண்பர்கள் யாரையும் சந்திக்காதவர் என்னை மட்டும் அழைத்து வரச்செய்திருக்கிறார் என்றால் அவரது நல்லெண்ணபட்டியல்ல நாமும் இருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டேன்.
என்னை அழைத்துச்சென்று தந்தையை அறிமுகப்படுத்திய பின்னர் மனைவி ஷாலினியை அறிமுகப்படுத்தி வைத்தார்.அவர் எனக்கு குழந்தை நட்சத்திரமாக இருந்தபோதே பழக்கம்.
“நினைவிருக்கிறதா மேடம்.! முதுமலையில் யானையின் மீது உட்கார்ந்திருந்த நீங்கள் தவறி கீழே விழுந்தபோது மொத்த யூனிட்டும் அலறியது ஞாபகம் இருக்கா…உங்கப்பா பாபு கதறிக்கொண்டு யானையின் காலடி அருகே கிடந்த உங்களை தூக்கிக்கொண்டது இன்னும்கண்ணுக்குள்ளேயே இருக்கு”என்றேன்.
திருமதி அஜித்தும் “ஆமாமாம் “என்று உற்சாகமுடன் நினைவுபடுத்துக்கொண்டார்..
வீட்டை சுற்றிக்காட்டிய பிறகு கேக் வெட்டி என்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார் தல அஜித்குமார்.
அதன்பிறகு அவர் என்னுடன் பேசிய அரசியல் நினைவுகள் என்னால் என்றுமே மறக்கமுடியாதது.
“வார்டுக்கு வார்டு ,ஏரியாவுக்கு ஏரியா ,ரவுடியிசம் .நாடே கெட்டுப்போயிருச்சு” என்று பல வருடங்களுக்கு முன்னர் அந்த பொது மனிதர் சொன்னது மறக்கக்கூடியதா?
அவருக்கு இன்று பிறந்தநாள் .அவரது ரசிகர்கள் மட்டும் இல்லாமல் பொதுமனிதர்களும் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
சினிமா முரசமும் தன்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவிக்கிறது.