கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு அமுலுக்கு வந்து நாளையுடன்50 நாட்களை வெற்றிகரமாக கடந்து விட்டது. இதன் காரணமாக திரைப்படத்துறை வேலைவாய்ப்பை நம்பி உள்ள தொழிலாளர்கள் வருவாய் இன்றி தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்
தமிழ் சினிமாவில் புதிய படங்களை விற்பனை செய்வதற்கு தயாரிப்பாளர்கள் – விநியோகஸ்தர்கள்-திரையரங்கு உரிமையாளர்களுக்கு இணைப்பு பாலமாக இருந்து கோடிக்கணக்கான வியாபாரங்கள் முடிவதற்கு காரணமாக உள்ள மீடியேட்டர்கள் உறுப்பினர்களாக உள்ள அம்மா மூவி அசோசியேசன் தங்கள் உறுப்பினர்களை பாதுகாக்கும் பொருட்டு நிவாரண பணிகளை தொடங்கியுள்ளனர்
மக்களை ஆளும் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு அறிவிப்புகள், அதனை அமுல்படுத்த கடுமையான நடவடிக்கைகளை மட்டுமே எடுத்துவருகிறது மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்கும் நிவாரண உதவிகள் போதுமானதாக இல்லாததுடன் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச நிவாரணங்கள் முழுமையாக அனைத்து மக்களுக்கும் இன்றுவரை சென்றடையவில்லை இந்த சூழ்நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதல் வாரத்தில் தனது உறுப்பினர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும், மளிகை சாமான் மற்றும் பண உதவியை வழங்கியது அம்மா மூவி அசோசியேஷன்
ஊரடங்கு 40 நாட்களை நிறைவு செய்யும் நிலையில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் தங்களது உறுப்பினர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க நேற்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கான அரிசி மற்றும் மளிகை சாமான்களை வழங்கிவருவது திரைத்துறையினர் மத்தியில் விவாதப்பொருளாகி வருகிறது
இது சம்பந்தமாக அம்மா மூவி அசோசியேஷன் செயலாளர் சரவணனிடம் பேசியபோது
தமிழ் சினிமாவில் வருடந்தோறும் 200 திரைப்படங்கள் வரை தயாரிக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகின்றன சுமார் 2000 கோடி மதிப்புள்ள இந்த படங்களின் தமிழக வியாபாரம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, வட இந்தியா, வெளிநாட்டு விநியோக உரிமை, ஆடியோ உரிமை, ரீமேக் உரிமை என வியாபாரம் செய்வதற்கு சரியான நபர்களை அடையாளம் காண தயாரிப்பாளர்களுக்கு பாலமாக இருப்பவர்கள் பிலிம் மீடியேட்டர்கள்
இவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாப்பது தமிழ் சினிமாவிற்கு முக்கியமானது எங்களது இந்த முயற்சிக்கு திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், இயக்குனர்கள் என பலதரப்பினரும் தாராளமாக உதவி செய்து வருகின்றனர் அதனை ஒருங்கிணைக்கும் பணிகளை மட்டுமே நாங்கள் செய்து வருகிறோம் என்றார்