குற்றுயிருடன் கிடக்கிறது திரை உலகம்.
எழுந்து நடமாடவே பல காலம் பிடிக்கும் என்கிறார்கள்.
படுக்கையில் அப்பனைப் போட்டுக்கொண்டு பிள்ளைகள் சொத்துக்காக அடித்துக் கொள்வதைப் போல திரை உலக அமைப்புகள் ஒன்றுக்கொண்டு மோதிக் கொள்வதைப் பார்க்க முடிகிறது.
அதில் நான் பெரியவனா நீ பெரியவனா என்கிற ஆதிக்க மனப்பான்மை இருக்கிறதே தவிர இண்டஸ்ட்ரியைப் பற்றிய கவலை சற்றேனும் இருக்கவில்லை.
“இதையாவது செய்யுங்கள் “என்று ஒரு நடிகர் வந்திருக்கிறார்.அவர் காட்டிய வழியம்மா என்று சிலராவது பின் தொடர்ந்தால் நல்லது.
விஜய் ஆண்டனி தற்போது பெப்சி சிவாவின் “தமிழரசன்” என்ற படத்தை முடித்து கொடுத்திருக்கிறார்.
.தொடர்ந்து, அதே நிறுவனத்தின் “அக்னி சிறகுகள்” என்ற படத்திலும், இயக்குனர் செந்தில் குமார் மற்றும் இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் எடுக்கப்படும் “காக்கி” என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த மூன்று படங்களும் 2020-ல் வெளியாகும் திட்டத்தில் எடுக்கப்பட்டுவந்தன.
ஆனால் , கொரோனா ‘ லாக் டவுன்’ தமிழ் சினிமாவை ஒட்டு மொத்தமாக புரட்டி போட்டுவிட்டதால் . 50 நாட்களுக்கு மேலாக எந்த பணிகளும் நடக்காமல், திரையரங்குகளும் இயங்காமல், பல படங்கள் அப்படியே கிடப்பில் கிடக்கின்றன.
புது படங்கள் திரையரங்குகளில் வெளியிட மேலும் மூன்று மாதங்கள் ஆகும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
கேரள, தெலுங்குப்பட நடிகர்கள் பாதிசம்பளம் தான் வாங்க வேண்டும் அப்போது தான் சினிமா மீண்டும் உயிர்பெறும் என தயாரிப்பாளர்கள் கூறியிருந்தனர்.
நடிகர் விஜய் ஆண்டனி, நடித்து வரும் “தமிழரசன்”,“அக்னி சிறகுகள்”, “காக்கி” ஆகிய மூன்று படங்களில் ஒப்புக்கொள்ளப்பட்ட சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைத்து கொள்ளுமாறு இந்த தயாரிப்பாளர்களிடம் கூறியுள்ளார்.
இது குறித்து “அக்னி சிறகுகள்” தயாரிப்பாளர் டி . சிவா கூறியதாவது,“50 நாட்களுக்கு மேலாக இந்த கொரோனா லாக் டவுன் காரணமாக தவித்து வரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு இப்படி ஒரு முன்னணி நடிகர் தாமாகவே முன்வந்து தன் சம்பளத்தை குறைந்த கொண்டது அனைவரும் பாராட்ட வேண்டிய, ஒரு நடவடிக்கை. அவரை போலவே அனைத்து நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களின் சம்பளத்தில் ஒரு பகுதியையே தாமாகவே முன்வந்து விட்டுக் கொடுத்து அனைத்து தயாரிப்பாளர்களையும் இந்த இக்கட்டான நேரத்தில் காப்பாற்ற வேண்டும்” என்கிறார்.