தமிழ்ச் சினிமாவில் உச்சத்தில் இருந்த நகைச்சுவை நடிகர்கள் என்றால் அது கவுண்டமணி செந்தில் கூட்டணி தான்.!
இன்றும் பலவிதமான மீம்ஸ்களுக்கு அவர்கள்தான் பிதாமகன்கள். !
இவர்கள் இன்று திரை உலகில் முக்கியமான இடத்தில் இல்லையென்றாலும் அவர்களது பெயரை எவராலும் மறக்க முடியவில்லை.
இவர்களுக்கு பின்னர் வடிவேலு ,சூரி,யோகிபாபு ஆகிய நடிகர்கள் அடுத்தடுத்து காமெடியில் கலக்கி வந்தாலும், கவுண்டமணி, செந்திலுக்கான இடம் இன்னும் அப்படியே தான் உள்ளது.
,நடிகர் செந்தில் டுவிட்டர் வலைத் தளத்தில் இணைந்து விட்டதாக அவரது பெயரில் திடீரென ஒரு டிவிட்டர் பதிவு வெளியாகி இருந்தது.
“வணக்கம், நான் உங்கள் நடிகர் செந்தில்.
கொரோனா வைரஸ் பரவுவதால் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கடைசியாக நான் சூர்யா தம்பியுடன் இணைந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தேன்.கூடிய விரைவில் இன்னும் பல படங்களில் நடித்து உங்களை சந்தோஷம் ஆக்குவேன் என்று நம்புகிறேன். அதுவரை உங்களுடன் தொடர்பில் இருக்க ஆசைப்பட்டேன்! எனவே நான் தற்போது டிவிட்டர் அக்கவுண்ட் தொடங்கி உள்ளேன்” என அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது.
மகிழ்ச்சியுடன் செந்திலை தொடர்பு கொண்டு,’அண்ணே கடைசியாக நீங்களும் டுவிட்டருக்கு வந்துட்டீங்க சந்தோசம் “என்றதும் அடுத்து அவர் கேட்ட கேள்விதான் நமக்கு பொளேர் என்று அறை விட்டது போலிருந்தது!
‘டுவிட்டர்’ னா என்ன தம்பி? காலையில் இருந்து நிறைய பேருகிட்டயிருந்து போன் வந்துகிட்டே இருக்கு. ஒருத்தரும் சரியா பதில் சொல்ல மாட்டேங்கிறாங்க .செல்போனில் உங்களுக்கு பேசணும்னா கூட பக்கத்தில உள்ளவங்க கிட்ட கொடுத்து நம்பரை போடச்சொல்லி பேசுவேன். நீங்க சொல்றமாதிரி எதிலும் சேரல,அறிக்கையும் விடல, அதுலேயே(போலி டுவிட்டர்) இது நான் கிடையாது என போடச் சொல்லிட்டேன் ஒரு மறுப்பு அறிக்கையும் கொடுத்துட்டேன்.நல்லவேளை வேற எதையும் அவங்க ”வில்லங்கமா போடல” என்றார் பரிதாபமாக