இந்தக்கொடுமையை எங்கே போய் சொல்வது?
கொரானாவிலும் கொடியதாக இருக்கிறதே…படத்தில் இருக்கிற ஜோடியைப் பாருங்கள். எவ்வளவு அழகாக இருக்கிறார்கள். ஒரு நடிகையின் சாயலில் பெண் இருக்கிறார் அல்லவா.!
மார்ச் மாதம்தான் இருவர்க்கும் திருமணம் நடந்திருக்கிறது.
பையன் பெயர் ஆர்த்தேஷ். பெண்ணின் பெயர் கிருத்திகா.
இருவர்க்கும் எத்தனையோ கனவுகள் இருந்திருக்கலாம். இளமையில் வாசலில் இருப்பவர்களுக்கு எவ்வளவோ ஆசைகள்..அந்த பருவத்தில் வருவது இயல்புதானே.!
ஊரடங்கு காலம்.அத்தனை உயிர்களும் அச்சத்தில் கூட்டுக்குள் அடங்கிக்கிடக்கிற வேளையில் இந்த சின்னச்சிட்டுகள் கை கோர்த்தபடி இயற்கையை ரசிப்பதை எவரால் தடை செய்ய முடியும்?
அன்றும் அப்படித்தான் தடுப்பணையின் எழிலை ரசித்தபடியே அதன் பின்னணியில் தங்களை படம் பிடித்துக் கொள்ள ஆசைப்பட்டிருக்கிறார்கள்.
செல்பி…! அங்கேதான் எமனும் இருந்திருக்கிறான்.
இருவரும் நெருக்கமுடன் தங்களை இணைத்துக்கொண்டு செல்பி எடுக்க முயற்சிக்க வினாடியில் தவறி தடுப்பணைக்குள் விழுந்து விட்டார்கள்.
ஹேமாவதி நதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் கைகளில் இருவரது பிணமும் கிடைத்திருக்கிறது..கர்நாடகா மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தில் இந்த கொடிய நிகழ்வு நடந்திருக்கிறது.
செல்பி எடுப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.இல்லையேல் மரணத்தின் மடியில் விழ வேண்டியது நிகழும்.!