கொரோனா காரணமாக,தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் தள்ளிப் போடப்பட்ட நிலையில், பொதுவில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவை தெரிந்துகொள்ளாது சுயமாக ஒரு குழுவைத் தேர்ந்தெடுத்து அவர்கள் திரையுலகின் பிரச்சனையைத் தீர்ப்பார்கள் என அறிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிலும் என் பெயரை என்னைக் கேட்காமல் பயன்படுத்தியது முற்றிலும் தவறான அணுகுமுறை.என இயக்குனர் இமயம் பாரதிராஜா தேனியில் இருந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த விபரம் வருமாறு,’ கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகஅமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக,திரைத்துறைக்கு ஏற்பட்டிருக்கும் பேரிழப்பை சரிசெய்து தமிழ் திரைத்துறையும் தயாரிப்பாளர்களும் மன நிம்மதியாக சிறப்பாக செயல்பட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்களாகிய பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர், எஸ் தாணு, கேயார், டிஜி தியாகராஜன், முரளிதரன் இவர்களுடன் மேலும் அனுபவம் வாய்ந்த 36 தயாரிப்பாளர்கள் அடங்கிய மொத்தம் 42 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக இன்று ஒரு அறிக்கை வெளியானது.
இந்நிலையில்,சற்று முன், இப்பட்டியலில் முதன்மையாக இடம் பெற்று இருந்த பாரதிராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
“முன்னாள் தலைவர்கள் அனுமதியோடு ஒரு குழு அமைக்கப்பட்டதாகப் பட்டியலொன்றும் அதனோடு சேர்ந்த அறிக்கையும் பத்திரிகைச் செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.
நாகரீகம் என்பது பெயரைப் பயன்படுத்தும் முன் அனுமதி கேட்பது.
ஆனால் நான் அறியாமல் எனது பெயரைப் பயன்படுத்தியது சரியல்ல.தேர்தல் தள்ளிப் போடப்பட்ட நிலையில் பொதுவில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவை தெரிந்துகொள்ளாது சுயமாக ஒரு குழுவைத் தேர்ந்தெடுத்து அவர்கள் திரையுலகின் பிரச்சனையைத் தீர்ப்பார்கள் என அறிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
அதிலும் என் பெயரை என்னைக் கேட்காமல் பயன்படுத்தியது முற்றிலும் தவறான அணுகுமுறை.பத்திரிகையாளர்கள் இச்செய்தி தவறானது என்பதை உணர்ந்து, எந்தவித அனுமதியும் பெறாமல் எனது பெயரைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட அறிக்கையை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் பாரதிராஜா கூறியுள்ளார்.இது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.