வெற்றிகரமான 50 நாள் என படங்களுக்கு போஸ்டர் ஒட்டிய காலம் காணாமலேயே போய்விட்டது.
கொரானாவினால் முடக்கப்பட்ட இந்தியத் திரை உலகில் கோடிக்கணக்கில் பணம் முடங்கிக் கிடக்கிறது.
குறிப்பாகத் தமிழ்த் திரை உலகம் ரத்தக்காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறது.
படிப்படியான ஊரடங்கு தளர்வுகளில் சினிமாவுக்கும் சில சலுகைகளை எதிர்பார்க்கிறது. டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என உச்ச நீதிமன்றமே கையைக் காட்டிவிட்ட நிலையில் தங்களுக்கும் சில சலுகைகளை அரசு அறிவிக்காதா என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
முதலையின் வாயில் சிக்கிய கஜேந்திரனுக்கு உதவிய கடவுளைப் போல ஓடிடி பிளாட்பாரம் உதவிக்கரம் நீட்டியிருக்கிறது. மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டம் உள்ள படங்களைத் தவிர இதர படங்களை ஓடிடி பிளாட்பாரம் வெளியிடத் தயாராக இருக்கிறது. ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் ,கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெங்குயின் ஆகிய படங்கள் வெளியாகும் தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மலையாளம் இந்தி கன்னடம் ஆகிய மொழிப்படங்களும் ஓடிடி பிளாட்பாரத்தில் வருகின்றன. தெலுங்கு தயாரிப்பாளர்கள்தான் இன்னும் முடிவெடுக்காமல் இருக்கிறார்கள்.