லட்சுமி ராமகிருஷ்ணன் .பன்முகம் கொண்டவர் ,நடிகை ,இயக்குநர் ,தயாரிப்பாளர் ,தொலைக்காட்சி பிரபலம்.
சமூக அவலங்களை சுட்டிக்காட்டுகிற வகையில் அமைந்திருந்த ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்கிற டி.வி ஷோ இவரை தமிழகம் முழுமையாகக் கொண்டு சேர்த்தது.
“என்னம்மா இப்படிபண்றீங்களேம்மா “என கடிந்து கொண்டதை சினிமாக்காரர்கள் காமெடியாக மாற்றி மேலும் பிரபலமாக்கினார்கள். பின்னர் அந்த நிகழ்ச்சியை நிறுத்தி விட்டு கலைஞர் டி.வி.யில் ‘நேர்கொண்ட பார்வை ‘என்கிற நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறார்.
பொதுவாக இவரது படங்களில் பெண்களை இழிவுபடுத்துகிற வகையில் காட்சிகள் இருக்காது. சமுதாய அவலங்களை தைரியமாக சுட்டிக்காட்டுவார். குத்துவார்.
அண்மையில் பிரபல இணைய தளத்துக்கு பேட்டி கொடுத்திருந்தார்.
அதில் அவர் அனுபவித்த பாலியல் ரீதியான வக்கிரங்களை சுட்டிக்காட்டியிருந்தார். அவரது மகளுக்கு நேர்ந்த கொடுமையான அனுபவத்தையும் சுட்டிக் காட்டியிருந்தார்.
பொதுவாக மூடி மறைக்கத்தான் பார்ப்பார்கள். ஆனால் லட்சுமி ராமகிருஷ்ணன் தைரியமாக சொன்னதுடன் இவைகளுக்கு என்ன தீர்வு என கேட்டிருக்கிறார். ஒரு லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு மட்டுமல்ல பெரும்பாலான பெண்களுக்கு நடந்து கொண்டிருக்கிற கொடுமைதான் அது.
“நான் சின்ன வயசுப் பெண்ணாக இருந்தபோது என்னுடைய அப்பா ஸ்தானத்தில் மதிக்கப்படட ஒரு உறவினர் அடிக்கடிஅவரது அந்தரங்க உறுப்பை என்னிடம் காட்டுவார். அறியாத வயது.புரியவில்லை.எதற்காக அப்படி காட்டுகிறார் என்பது தெரியவில்லை.
நான் வளர்ந்த பிறகுதான் அந்த வக்கிரம் புரிந்தது.நொந்துபோய் விட்டேன்.பிரபலமான வீட்டுப்பெண்ணான எனக்கே இப்படி என்றால் சாமானியப்பெண்களின் நிலை என்ன?
இது பழைய கதைதானே என்று ஒதுக்கிவிடாதீர்கள். சமீபத்தில் என் மகளுக்கும் இப்படி நடந்திருக்கிறது.
ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு திரும்புகிறபோது லிப்டில் ஒருத்தன் பேண்ட்டை அவிழ்த்துக் காட்டியிருக்கிறான் .பதறிப்போனவள் அழுதுகொண்டே வந்து என்னிடம் சொன்னாள் .சிசிடிவியில் அவனுடைய முகம் சரியாகத் தெரியவில்லை.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தினமும் நடக்கவே செய்கின்றன.நாம் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்போகிறோம்?”என அறச் சீற்றமுடன் கேட்டிருக்கிறார்.
என்ன பதில்?