ஒரு மனிதனை பிரபலமாக்குவது அவனது செயல்கள்தான்.!
மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றவன்தான் உண்மையான தேசபக்தன் என்று சொன்னால் அப்படி சொன்னவன் ‘இன்றைய காலகட்டத்தில்’ ஹீரோவாக மதிக்கப்படுவான் .!
காந்தியடிகளை சுட்டுக்கொன்ற கோட்ஸேயை புகழ்ந்து சொல்லி இன்று பிரபலமாகி இருக்கிறார் ஆந்திராவின் முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபு .ஜனசேனா என்கிற கட்சியின் பிரமுகர். அது அவரது குடும்ப கட்சிதான்.! இவரது சகோதரர் பவன் கல்யான்தான் கட்சித் தலைவர். தேர்தலில் போட்டியிட்டு ஒரு இடத்தைப் பிடித்ததாக நினைவு.சரி பிரச் னைக்கு வருவோம்.
இந்தியாவின் தேசத்தந்தை என்றால் மகாத்மா காந்தி அடிகளை மட்டுமே குறிக்கும் .
அவர் 1948 ஜனவரியில் நாதுராம் கோட்ஸே என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.இந்த கோட்ஸே ஆர்.எஸ்.எஸ்.என்கிற அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்.
இவரைப் புகழ்ந்துதான் நாகபாபு கருத்து சொல்லியிருந்தார்.
“அவர் என்ன செய்ய விரும்பினாரோ அதை செய்து முடித்திருக்கிறார்.அவரது தேசப்பற்றை யாரும் கேள்வி கேட்க முடியாது.அவர் உண்மையான தேசபக்தர் .”என்று கோட்ஸேயை நியாயப்படுத்தி இருக்கிறார்.
இவர் மீது தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் போலீசில் புகார் செய்திருந்தார். இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.