சரியான போட்டி ! கட்டி உருண்டு எப்படியாவது கரை சேர்ந்தால் சரி என்று சொல்லுமளவுக்கு இந்தி டி வி.நடிக ,நடிகை இருவர் மோதிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்தி டி.வி மற்றும் ரியாலிட்டி ஷோ நடிகர் மயூர் வர்மா.
இவர் மும்பையில் சைபர் க்ரைமில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
பிக்பாஸ் (இந்தி) 13-ல் பங்குகொண்ட தேவலீனா பட்டாச்சாஜி மீது அவர் கடுமையாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
நடிகர் மயூர் வர்மா, தனது டிவிட்டர் பக்கத்தில்,புகாரின் நகலை இணைத்து, “விஷயம் மோசமாகிக் கொண்டே போகிறது. அதனால் தான் இந்த விவகாரத்தை சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைத்து விட்டேன். இனி எல்லாம் அவர்கள் கையில்தான் இருக்கிறது. போலீசார் சரியான நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறி கையை கழுவி இருக்கிறார்.
“ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை எனது பெயரை தேவலீனா கெடுக்க பார்க்கிறார். டிவிட்டரில் என்னை பற்றிய தவறான பதிவுகளை லைக் செய்து வருவதும் எனக்குத் தெரியும். தேவலீனா மற்றும் அவரது ரசிகர்களால் நான் கேலி கிண்டலுக்கு ஆளாகி உள்ளேன். இனி என்னால் தாங்கிக்கொள்ள முடியாது . என் பெயர் மதிப்பிழப்பதாக உணர்கிறேன். அதனால்தான் புகார் எழுப்பினேன்” என்று கூறியுள்ளார்.
ஆனால் இதைப்பற்றி தேவலீனா கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. அவன் கிடக்கிறான் வெங்காயம் என்கிற பாணியில்தான் பதில் சொல்லியிருக்கிறார்.
“எனக்கு அந்த ஆளை பத்தியும் தெரியாது,அந்தாளு கொடுத்த புகார் பத்தியும் தெரியாது.எனக்கு சம்பந்தமே இல்லாத இந்த விஷயத்தில் என் பெயர் அடிபடுவதை நான் விரும்பல.அல்பத்தனமான விளம்பரத்துக்காக அந்தாளு இப்படி நடந்து கொண்டிருக்கலாம் ” என்கிறார்.