“சில்லுக் கருப்பட்டி” என்கிற தன் புதுமைப் படைப்பின் மூலம் அனைவரது உள்ளங்களையும் கவர்ந்து புகழ் வெளிச்சத்துக்கு வந்தவர் ஹலீதா.
தற்போதுகவனம் செலுத்தித் தொடங்கியிருப்பது ‘மின் மினி’ படத்துக்காக.!
அடுத்த படம் குறித்து ஹலீதா விவரிப்பதே, படத்தின் மீது ஆர்வத்தைத் தூண்டுகிறது.
“தப்பிப் பிழைத்தவரின் குற்றம் என்பது எந்த அளவுக்கு உண்மை. நீங்கள் நேசிப்பரின் கனவுகளை நனவாக்க எந்த அளவுக்கு துணை நிற்கின்றீர்கள்? அன்பு செலுத்துவதற்கும் வெறுப்பற்கும் மத்தியில் உள்ள மெலிதான கோடு என்ன? பெரியவர்களைவிட இளம் வயதினர் ஏன் அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்களாக இருக்கிறார்கள்? அமைதியான மேகம் போலிருந்து என்னுள் இறங்கிய கேள்விகளுக்கு விடை காண நான் செய்யும் முயற்சியே ‘மின்மினி'” என்கிறார் இயக்குநர் ஹலீதா.
“இளம் பருவத்தினர், தப்பு செய்தும் சிக்கிக்காதவரின் குற்றவுணர்வு, அன்பு மற்றும் வெறுப்பு இவற்றுக்கிடையே உள்ள மெலிதான வேறபாடு, இளம்பருவத்தினரின் உணர்ச்சிகள் குறித்தெல்லாம் நிறைய கேள்விகள் எழுந்தாலும், இவற்றையெல்லாம் எளிமையாகவும் மென்மையாகவும் படத்தில் சொல்லியிருக்கிறேன்” என்கிறார் இயக்குநர்.
மேலும் இது குறித்து விவரித்த இயக்குநர் ஹலீதா ஷமீம் “பதின் பருவத்தினரின் உலகில் நுழைந்து அவர்களின் உணர்ச்சிகரமான வாழ்வியலை படத்தில் பதித்தது எனக்கு இனிய அனுபவமாக அமைந்தது. உணர்ச்சிகளால் ஆளப்படும் இளம்பருவத்தினரின் இந்தப் பகுதியை மற்றவர்கள் புரிந்து கொள்வது சற்றே கடினமானது.
வெற்றியைக் கொண்டாடுவது, காதலை வெளிப்படுத்துவது, தோல்வியை எதிர்கொள்வது என்று எந்த விதமான உணர்ச்சிகளையும் ஒரு விதமான அதீத தன்மையுடன் வெளிப்படுத்துபவர்களாக இருக்கின்றனர் பதின் பருவத்தினர்.
இது ஏன் என்ற கேள்வியே, பதின் பருவத்தினரைப் பிரதானப்படுத்தி ஒரு கதை எழுத எனக்குத் தூண்டுகோலாக அமைந்தது. படத்தைப் பற்றி மேலும் நான் விளக்குவதைவிட ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வந்து பார்த்து ரசிப்பதுதான் சிறப்பாக இருக்கும்” என்றார் இயக்குநர்.
தனது இரண்டாவது படமான ‘சில்லுக் கருப்பட்டி’ படத்துக்கு முன்பே மின்மினி படத்தின் படப்பிடிப்பைத் துவக்கியிருக்கிறார் ஹலீதா ஷமிம். ஆயினும் இது இரண்டாவது படமாக வெளி வராதது ஏன்?
“2014 ஆம் ஆண்டு எனது முதல் படமான பூவரசம் பீப்பீ வெளிவந்ததுமே மின்மினி படத்தைத் துவங்கி விட்டேன். மின் மினி படத்தில் சிறுவர்களாக இருந்த சிலர் வளர்ந்த பிறகு நடப்பதை காட்சிப்படுத்த வேண்டியிருந்தது. எனவே படப்பிடிப்புக்கு இடைவெளிவிட்டு காத்திருந்தேன். இப்போது அவர்கள் நான் எதிர்பார்த்த அளவு இன்னும் வளர்ந்த பிறகு மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பித்திருக்கிறேன்” என்கிறார் இயக்குநர்.
‘மின்மினி’ படத்தில் குழந்தை நட்சத்திரங்கள் கெளரவ் கலை, ப்ரவீண் கிஷோர் மற்றும் த்ரிஷ்யம் பாபநாசம் படங்களில் நடித்த எஸ்தர் அனில் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘சில்லுக்கருப்பட்டி’ படத்தில் ஒளிப்பதிவாளர்களாகப் பணியாற்றிய மனோஜ் பரமஹம்ஸா மற்றும் அபிநந்த ராமானுஜம் ஆகியோர் ‘மின்மினி’ படத்தைத் தயாரிக்கின்றனர்.