வான் மழை பொய்த்து விட்டால் ஊற்று நீரைத்தான் குடிக்க வேண்டியதாக இருக்கும்.
ஆழ் துளை குழாய்தான் கை கொடுக்கும். ஆனால் அடை மழை கொட்டித் தீர்த்து விட்டால் ஆழ் துளையும் வேண்டாம் .ஊற்று நீரும் தேவையில்லை.
தற்போது சினிமா உலகின் தாகத்துக்கு காய் கொடுப்பது தியேட்டரா,ஓடிடி தளமா?
கடுமையான பிரச்னையாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கேரளத்தில் ஓரளவு பிரச்னை ஓய்ந்து விட்டது.
கேரளத்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கமும் கூடிப்பேசி ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள் என்கிறார்கள் .ஓடிடியில் திரையிடப்படும் படங்களுக்கு தியேட்டரில் அனுமதி இல்லை.
தற்போது இந்த பிளாட்பாரமில் வெளியிட எத்தனை படங்கள் ரெடியாக இருக்கின்றன என்பது பற்றி கணக்கு எடுத்து வருகிறார்கள். ஊரடங்கு காரணமாக 60 படங்கள் வரை தேங்கி இருப்பதாக அங்கு சொல்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் வரவில்லை. ஆனால் 2 டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் அறிவித்தபடி அவர்களது தயாரிப்பான பொன்மகள் வந்தாள் ஓடிடியில் வெளியாகி விட்டது. சூர்யாவின் இந்த நிறுவனத்தைப் பொருத்த வரை மசாலா படங்களை அவர்கள் தயாரிப்பதில்லை.அவர்கள் இலட்சிய நோக்குடன் தான் தயாரிக்கிறார்கள்.
ஆனால் தற்போது ராகவாலாரன்ஸின் இயக்கத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்திப்படமான ‘லட்சுமி பாம்’ படத்தை அதன் தயாரிப்பாளர் அக்ஷய் குமார் ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறார் என்பது உறுதியாகி இருக்கிறது.
முதன் முதலில் வெளியாகிய செய்தியில் அக்ஷய் குமார் மற்றும் கியாரா அத்வானி நடித்த லட்சுமி பாம் , வித்யா பாலன் நடித்த சகுந்தலா தேவி மற்றும் அமிதாப் பச்சன்-ஆயுஷ்மான் குரானா நடிப்பில் உருவானா குலாபோ சீதாபோ ஆகிய படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருந்தன. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படங்களின் வெளியீட்டுத் தேதிகுறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் இந்த மூன்று படங்களும் நேரடியாக ‘ஓடிடி’ தளங்களில் வெளியாகஉள்ளதாகவே தகவல்கள் வெளியாகின.
இதற்கு படத்தயாரிப்பாளர்களும் , திரையுலக பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட பட நிறுவனங்கள் ஒடிடி தளத்தில் வெளியாகவில்லை என அறிவித்தனர்.
ரசிகர்கள் இந்தப் படங்களை, தாங்கள் தியேட்டரில் பார்க்கவே விரும்புகிறோம் என்று சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில்தான் , “லட்சுமி பாம் படம் இப்போது ஓடிடி யில் வெளியாகும் என்ற செய்தி உண்மைதான். முதலில் கருத்து வேறுபாடு இருந்தாலும்,அது பேசித்தீர்க்கப்பட்டு விட்டது. இப்போது படம் ஆன்லைனில் வெளியிடப்படும். போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மிச்சமிருக்கின்றன, லாக்டவுன் முடிந்ததும் அதை விரைவாக முடித்துவிடுவோம்.மேலும், தியேட்டர்களில் எதிர்ப்பார்த்த அளவு கொரோனா அச்சறுத்தல் காரணமாக மக்களால் வர முடியாது. எனவே படம் வெற்றி பெறாது. லாக்டவுன் முடிந்த ஒரு மாதத்திற்குப் பிறகு ஓடிடி இணைய தளத்தில் படத்தை வெளியிடுவதே இப்போதைய முடிவு. ஆனால் பட வெளியீட்டு தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஊரடங்கு முடிந்த பின்தான் படத்தைப் பற்றிய செய்தி எதுவானாலும் வெளியிடப்படும் ” என்கிறது சம்பந்தப்பட்ட வட்டாரம்.
தியேட்டர்களில் வெளியானால் பாக்ஸ் ஆபிசில் ரூ .200 கோடிக்கு மேல் வியாபாரம் ஆகும் என கூறப்பட்டு வந்த நிலையில், லக்ஷ்மி பாம் ரூ .125 கோடிக்கு ‘ஓடிடி’ தளத்திற்கு விற்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. படத் தயாரிப்பாளரின் இந்தமுடிவு, இயக்குனர் ராகவாலாரன்சுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளதாக சொல்கிறார்கள்..